வங்கி கணக்குகளில் 4 பேர் வரை நாமினியாக நியமிக்க அனுமதி
வங்கி கணக்குகளில் 4 பேர் வரை நாமினியாக நியமிக்க அனுமதி
UPDATED : ஆக 10, 2024 05:59 AM
ADDED : ஆக 10, 2024 12:55 AM

புதுடில்லி வங்கிக் கணக்கு வைத்துள்ளோர், நான்கு பேர் வரை, தங்களுடைய 'நாமினி'களாக நியமிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நாடு முழுதும் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை, 2024 மார்ச் நிலவரப்படி, 78,000 கோடி ரூபாயாக உள்ளது.
பல்வேறு காரணங்களால், பணத்தை எடுக்க முடியாமல், வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பாதுகாப்பு நிதி
இதற்கு தீர்வு காணும் வகையில், ஒருவர் தன் வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றுக்கு, நான்கு பேர் வரை, நாமினிகளாக நியமிக்கும் வசதியை அளிக்கும் வகையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
தற்போது வங்கிகள், சேமிப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், ஒரு 'நாமினி'யை மட்டுமே நியமிக்க அனுமதி வழங்குகின்றன. ஒருவருடைய மரணத்துக்குப் பின், பல்வேறு காரணங்களால், அந்தப் பணத்தை குடும்பத்தார் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.
மசோதாவின் நோக்கம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
வங்கி கணக்குகள், லாக்கர், பங்குகள் உட்பட பல நிதி கணக்குகளை, குடும்பத்தினர் பெறும் வகையில், வாடிக்கையாளர் நலனைக் கருதி, நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாமல் உள்ள டிவிடென்ட்கள், பங்குகள், பத்திரங்களின் வட்டி மற்றும் அதை திரும்பப் பெறுவது போன்றவை, ஐ.இ.பி.எப்., எனப்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மாற்றப்படும்.
நிர்வாக திறன்
அதில் இருந்து நாமினிகள், பணத்தை திரும்பப் பெறுவது அல்லது தங்களுடைய சொந்தக் கணக்குக்கு மாற்ற உரிமை கோர முடியும்.
இதன்வாயிலாக, வங்கிகளின் நிர்வாகத் திறன் மேம்படும். முதலீட்டாளர் நலன் பாதுகாக்கப்படும்.
இதற்காக, ரிசர்வ் வங்கி சட்டம், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம், பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம், வங்கி நிறுவனங்கள் சட்டம் போன்றவற்றில் திருத்தம் செய்யப்படும் நோக்கத்துடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.
வங்கி நிர்வாகத் தரத்தை மேம்படுத்துவது, ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அறிக்கை தாக்கல் செய்வது, முதலீட்டாளர் பாதுகாப்பை உறுதி செய்வது, பொதுத்துறை வங்கிகளின் தணிக்கையை மேம்படுத்துவது, நுகர்வோருக்கு அதிக வசதி கொடுப்பது ஆகியவையே இதன் நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவிக்காலம்
இதைத்தவிர, கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்களுக்கான அதிகாரம், ஆறு ஆண்டுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட, 5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை, 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
அதுபோல கூட்டுறவு வங்களின் இயக்குனர்கள் பதவிக்காலம், 8 ஆண்டில் இருந்து, 10 ஆண்டாக உயர்த்தப்பட உள்ளது.