முதல்வரின் வாரிசாக தயாராகும் யதீந்திரா உழைக்கும் தொண்டர்களுக்கு 'அல்வா'
முதல்வரின் வாரிசாக தயாராகும் யதீந்திரா உழைக்கும் தொண்டர்களுக்கு 'அல்வா'
ADDED : மே 29, 2024 09:25 PM

காங்கிரஸ் என்றாலே குடும்ப அரசியலுக்கு பெயர் பெற்ற கட்சி. அந்த கட்சிக்காக உழைக்கும் சாதாரண தொண்டர், பெரிய பதவிக்கு வருவது அவ்வளவு எளிது இல்லை. ஆனால், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகள், கட்சிக்காக எதுவும் செய்யாமலேயே, பதவியை தட்டிச் சென்றுவிடுவர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட, கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் சிலருக்கு, கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. அவர்கள் தயக்கம் காட்டினர்.
இதனால் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை கண்டறிந்து, அவர்களுக்கு 'சீட்' கொடுக்க, கட்சி மேலிடம் நினைத்தது.
ஒருவேளை சாதாரண தொண்டர்கள் வெற்றி பெற்றால், அவர்களுக்கு கீழ், நாம் வேலை செய்ய வேண்டுமே என நினைத்த சில அமைச்சர்கள், கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து, தங்களது வாரிசுகளுக்கு 'சீட்' வாங்கிக் கொடுத்தனர்.
வாரிசுகள் அதிகாரம்
தங்களுக்கு பின்னர் வாரிசுகள் தான், அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதில், அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் அமைச்சர் மஹாதேவப்பா மகன் சுனில் போஸ் சாம்ராஜ் நகரிலும்; ராமலிங்கரெட்டி மகள் சவும்யா ரெட்டி பெங்களூரு தெற்கிலும்...
சதீஷ் ஜார்கிஹோளி மகள் பிரியங்கா சிக்கோடியிலும்; லட்சுமி ஹெப்பால்கர் மகன் மிருணாள் பெலகாவியிலும்;
சிவானந்தா பாட்டீல் மகள் சம்யுக்தா பாகல்கோட்டிலும்; ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் கன்ட்ரே பீதரிலும் களமிறக்கப்பட்டனர்.
இந்த வரிசையில், முதல்வர் சித்தராமையாவும், தன் மகன் யதீந்திராவை அரசியலில் வளர்த்துவிட நினைக்கிறார். யதீந்திரா, 2018 முதல் 2023 வரை மைசூரு வருணா எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். தந்தை சித்தராமையாவுக்காக, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், தொகுதியை விட்டுக் கொடுத்தார்.
அரசியல் எதிர்காலம்
லோக்சபா தேர்தலில் மைசூரில் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் பா.ஜ., வேட்பாளராக யதுவீர் களமிறக்கப்பட்டதால், சித்தராமையாவுக்கு பயம் ஏற்பட்டது. மகன் தோற்றால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று, எச்சரிக்கையுடன் செயல்பட்டார். லட்சுமண் என்பவரை வேட்பாளராக நிறுத்தினர்.
இந்நிலையில், கர்நாடக மேலவையில் காலியாகும் 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதில் ஒரு எம்.எல்.சி., பதவியை மகனுக்கு வாங்கித் தர, சித்தராமையா காய் நகர்த்தி வருகிறார்.
எப்படியும் யதீந்திராவுக்கு சீட் வாங்கிக் கொடுத்து விடுவார். இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என, சித்தராமையா அறிவித்து விட்டார். இதனால் தனது அரசியல் வாரிசாக, யதீந்திரா உருவாக அனைத்து முயற்சியும் செய்து வருகிறார். அவரது மறைந்த மூத்த மகன் ராகேஷின் மகன் தவானையும், அரசியலுக்கு அழைத்து வருவதில் சித்தராமையாவுக்கு உடன்பாடு உள்ளது.
சிவகுமார் மகள்
முதல்வரும், அமைச்சர்களும் அரசியல் வாரிசுகளை உருவாக்கி விடுவதை பார்த்து, துணை முதல்வர் சிவகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். மூத்த மகள் ஐஸ்வர்யாவை அரசியலுக்கு கொண்டு வர, சிவகுமாருக்கு ஆசை இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் 'பல கல்வி நிறுவனங்களை கவனித்து வருவதால், அரசியலுக்கு வர மாட்டேன்' என, ஐஸ்வர்யா கூறி உள்ளார்.
அரசியல்வாதிகள் சொன்னபடி நடப்பவர்கள் இல்லை. இதனால், அவர்களின் வாரிசுகள் கூறுவதை நம்பவும் முடியாது. எந்த நேரத்திலும் சிவகுமாரின் மகளும் அரசியலுக்கு வரலாம்.
எல்லாவற்றுக்கும் காலமும், நேரமும் தான் பதில் சொல்ல வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, 'கட்சிக்காக உழைக்கும் எங்களுக்கு அல்வா தான் தருகின்றனர்' என, தொண்டர்களும் ஒரு பக்கம் குமுறுகின்றனர்
- நமது நிருபர் -.