ADDED : ஜூலை 26, 2026 07:23 PM
ஜம்மு, ஜூலை 27–
ஜம்மு – காஷ்மீரில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது.
யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில், கடல் மட்டத்தில் இருந்து, 12,730 அடி உயரத்தில் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை கடந்த, 3ல் தொடங்கியது; ஆக., 28ல் நிறைவடைகிறது. இதுவரை நான்கு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கனமழையால், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நிலைமை சீரானதை அடுத்து யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ஜம்மு முகாமில் இருந்து, 166 வாகனங்களில், 4,474 பக்தர்கள் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பல்தால் முகாமுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
