ADDED : ஏப் 01, 2024 06:57 AM

சித்ரதுர்கா : ''கட்சி தாவுவோருக்கு கடிவாளம் போடவில்லை என்றால், அரசியலை சுத்தப்படுத்த முடியாது. தொண்டர்களின் அதிருப்தி அதிகரிக்கும்,'' என சிரிகெரே தரளபாளு பிரம்ம மடத்தின் சிவமூர்த்தி சிவாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் கூறியதாவது:
ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு தாவுவோருக்கு, கடிவாளம் போட வேண்டும். அப்போது தான் அரசியல் சுத்தமாகும்.
இன்றைய காலத்தில், அரசியல் துாய்மை மிகவும் அவசியம். இதை செய்ய அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.
கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு செல்லும் நபர், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள், புதிய கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். அவருக்கு எந்த பதவியும் கிடைக்க கூடாது.
இது போன்ற விதிமுறை கொண்டு வந்தால், அரசியல் கட்டுக்குள் வரும். சொகுசு விடுதி அரசியலுக்கும் முற்றுப்புள்ளி விழும்.
பத்து ஆண்டுகளுக்கு முன், சட்டசபை தேர்தலில் மதசார்பின்மை, மதசார்பற்ற அரசியல் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு ஓட்டு போடும்படி வேண்டுகோள் விடுத்தோம். இந்த முயற்சி வெற்றி அடைந்தது.
ஆனால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாதது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

