சுதாகர் - விஸ்வநாத் மோதல் முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா
சுதாகர் - விஸ்வநாத் மோதல் முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா
ADDED : ஏப் 04, 2024 04:57 AM

சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர், பா.ஜ., - எம்.எல்.ஏ. விஸ்வநாத் சண்டைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
பெங்களூரு எலஹங்கா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத். லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதி பா.ஜ., 'சீட்' டை மகன் அலோக்கிற்கு வாங்கி கொடுக்க முயற்சி செய்தார்.
ஆனால் முன்னாள் அமைச்சர் சுதாகருக்கு சீட் கிடைத்தது. இதனால் விஸ்வநாத் அதிருப்தியில் இருந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, விஸ்வநாத்தை சந்திக்க அவரது வீட்டிற்கு சுதாகர் சென்றார். ஆனால் அவரை வாசலில் காக்க வைத்து திருப்பி அனுப்பினார் விஸ்வநாத்.
'எனது வீட்டிற்கு வருவதாக, சுதாகர் என்னிடம் சொல்லவில்லை. மொபைல் போனில் என்னை அழைத்ததாக பொய் கூறுகிறார்' என்றும் கூறினார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் பெங்களூரு வந்து பிரசாரம் செய்தார். அவரிடம் சென்று சுதாகர், விஸ்வநாத் பற்றி கூறி உள்ளார். இதையடுத்து, விஸ்வநாத்திடம் பேசிய அமித் ஷா, சுதாகருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்; அவர் வெற்றிக்கு உழைக்கும்படி அறிவுறுத்தினார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த விஸ்வநாத், சுதாகரை நேற்று காலை தனது வீட்டிற்கு வரவழைத்து, விருந்து வைத்தார். இதன்மூலம் இருவர் இடையிலான சண்டைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

