அமித் ஷா போலி வீடியோ விவகாரம்: காங்.,கின் அருண் முக்கிய குற்றவாளி?
அமித் ஷா போலி வீடியோ விவகாரம்: காங்.,கின் அருண் முக்கிய குற்றவாளி?
ADDED : மே 09, 2024 05:13 AM

புதுடில்லி: மத்திய அமைச்சர் அமித் ஷாவின் போலி வீடியோவை உருவாக்கியதில் முக்கிய குற்றவாளியாக காங்கிரசின் சமூக ஊடகக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அருண் பீரெட்டி உள்ளதாக டில்லி போலீசார் சந்தேகித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலை ஒட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு சட்டவிரோதமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் இந்த இட ஒதுக்கீடு முற்றிலும் ரத்து செய்யப்படும்.
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடம் இருந்து பறிக்கப்பட்ட இட ஒதுக்கீடு அவர்களுக்கே வழங்கப்படும்' என பேசியிருந்தார்.
ஆனால், 'நாட்டில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்வோம்' என அவர் பேசியதாக போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக, டில்லி, மஹாராஷ்டிராவின் மும்பை உட்பட பல்வேறு இடங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் டில்லி காங்கிரசின் சமூக வலைதள பக்கமான, 'ஸ்பிரிட் ஆப் காங்கிரஸ்' கணக்கை கையாண்ட தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த அருண் பீரெட்டியை டில்லி சிறப்புப் பிரிவு போலீசார் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், போலி வீடியோ உருவாக்கிய குற்றவாளிகளில் அருண் பீரெட்டியும் ஒருவர் என டில்லி போலீசார் உறுதிபட நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பீரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களின் அறிக்கைகள் தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து இன்னும் வரவில்லை. ஆனால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், போலி வீடியோவை உருவாக்கியவர்களில் அருண் பீரெட்டியும் ஒருவர்' என போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட கடந்த 28ம் தேதி முதல் தெலுங்கானாவில் முகாமிட்டுள்ள டில்லி சிறப்புப் பிரிவு போலீசார், பல இடங்களில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.