மோடி 3.0 ஆட்சியின் 100 நாள் சாதனைகள் 'ரிப்போர்ட் கார்டு' வெளியிட்டார் அமித் ஷா
மோடி 3.0 ஆட்சியின் 100 நாள் சாதனைகள் 'ரிப்போர்ட் கார்டு' வெளியிட்டார் அமித் ஷா
ADDED : செப் 18, 2024 02:11 AM

புதுடில்லி :
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்று, 100 நாட்கள் நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் அடங்கிய சிறப்பு கையேடுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச உற்பத்தி மையமாக நம் நாட்டை உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த 100 நாட்களில், 28,600 கோடி ரூபாய் முதலீட்டில் 12 தொழில் நகரங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
மஹாராஷ்டிராவின் புனே, தானே மற்றும் கர்நாடகாவின் பெங்களூருவில் மெட்ரோ ரயில் பணிகளுக்கு 30,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
மருத்துவ படிப்பில் புதிதாக 75,000 இடங்கள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.
பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகர்புறங்களில், 2.30 லட்சம் கோடி ரூபாய் மானியத்தில், ஒரு கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன
பிரதமர் சூரிய சக்தி திட்டத்தில், 3.5 லட்சம் வீடுகளுக்கு சூரிய மின் சக்தி வசதி செய்யப்பட்டுள்ளன
முத்ரா கடன் திட்டத்தின் வரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு; ஒரே தேர்தல்
லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நாடு முழுதும் ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம், இந்த ஐந்தாண்டு ஆட்சி முடிவதற்கு முன் நடைமுறைப்படுத்தப்படும்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் இனக்கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினருடன் அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடந்த மூன்று நாள் வன்முறைக்கு பின், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. பிரச்னைக்கு முடிவு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மணிப்பூரின் பதற்றம் நிறைந்த பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அண்டை நாடான மியான்மரில் இருந்து ஊடுருவலை தடுக்க, 1,500 கி.மீ., எல்லைப் பகுதியில் வேலி அமைக்கும் பணியை அரசு துவக்கியுள்ளது.
இருநாடுகளின் எல்லையில் வசிக்கும் மக்கள், விசா இன்றி 16 கி.மீ., வரை பரஸ்பரம் சுதந்திரமாக வந்து செல்லும் ஏற்பாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மணிப்பூரின் பல்வேறு அமைப்புகளுடன், 11 அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 10,900 இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட்டுஉள்ளனர். ஒரு அமைப்பு மட்டும் தான் மீதம் உள்ளது. அவர்களுடனும் பேச்சு நடந்து வருகிறது.
ரயில் விபத்துகள்
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது நிகழும் ரயில் விபத்துகளுக்கான காரணத்தை, அரசு ஆராய்ந்து வருகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளது.
ஒருவேளை இது சதிவேலை எனில், இது நீண்ட காலம் நீடிக்காது. ரயில்வே துறையில் நடக்கும் நாச வேலைகளை முறியடிக்க சி.பி.ஐ., - என்.ஐ.ஏ., ரயில்வே போலீசார் மற்றும் மத்திய உள்துறை இணைந்துதிட்டம் வகுத்துள்ளன.
மோடி 3.0 அரசு பதவி ஏற்ற 100 நாட்களுக்குள், எட்டு புதிய ரயில்வே வழித்தடங்களுக்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் வாயிலாக, 4.42 கோடி மனித நாட்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

