சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமித் ஷா ஷிவமொகா போட்டியில் ஈஸ்வரப்பா உறுதி
சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமித் ஷா ஷிவமொகா போட்டியில் ஈஸ்வரப்பா உறுதி
ADDED : ஏப் 04, 2024 11:01 PM

பெங்களூரு: லோக்பா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு சீட் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இவரை சமாதானம் செய்த, பா.ஜ., தலைவர்கள் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஷிவமொகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போதும், அவரது நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பா பங்கேற்க வில்லை. சில நாட்களுக்கு முன், மத்திய அமைச்சர் அமித் ஷா, ராம்நகருக்கு வந்த போது ஈஸ்வரப்பாவை தொடர்பு கொண்டு பேசியும், கோபம் குறையவில்லை.
எனவே, தன்னை சந்திக்க டில்லிக்கு வரும்படி, அமித்ஷா அழைப்பு விடுத்ததால், நேற்று முன்தினம் மாலை ஈஸ்வரப்பா டில்லிக்கு சென்றார். ஆனால் இரவாகியும் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ஈஸ்வரப்பாவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. டில்லியில் இருந்து ஏமாற்றத்துடன் பெங்களூரு திரும்பினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நான் டில்லிக்கு சென்றும், அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதைக்கு சந்திக்க வேண்டாம் என, கூறியுள்ளார். எனவே நான் திரும்பிவிட்டேன். அவர்தான் என்னை டில்லிக்கு அழைத்தார். மூத்தவர் அழைத்துள்ளார். செல்லா விட்டால் ஈஸ்வரப்பாவுக்கு எவ்வளவு திமிர் என்ற பேச்சு வரும்.
எனவே அவரது பேச்சுக்கு மதிப்பளித்து, டில்லிக்கு சென்றேன். ஷிவமொகா தொகுதியில் சுயேச்சையாக ஏன் போட்டியிடுகிறேன் என்பதை, நான் ஏற்கனவே அவரிடம் தொலைபேசியில் விவரித்திருந்தேன்.
என்னை நேரில் சந்திக்கும் போதும், அதே கேள்வியை கேட்பேன் என்பது அவருக்கு புரிந்திருக்கும். இதனால் என்னை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.
அவர் என்னை சந்திக்காமல் இருந்ததே எனக்கு நல்லது. அமித்ஷாவை சந்தித்திருந்தால், நான் சுயேச்சையாக போட்டியிட கூடாது என, கூறியிருப்பார். இதனால் நான் தர்மசங்கடத்தில் சிக்கியிருப்பேன். இப்போது அவரை சந்திக்க வாய்ப்பளிக்காதது நல்லதுதான். ஈஸ்வரப்பா செய்வது சரிதான் என, அவருக்கு தோன்றியிருக்கும்.
எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தோற்கட்டும் என்ற விருப்பம் அமித்ஷாவுக்கும் இருக்கலாம். ராகவேந்திராவை தோற்கடித்து, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கையை பலப்படுத்த வேண்டும்.
நான் சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி. இந்த முடிவில் இருந்து, நான் பின்வாங்கமாட்டேன். நான் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கில், மீண்டும் என்னை டில்லிக்கு அழைத்தால் செல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

