ADDED : ஏப் 30, 2024 10:29 PM

ஹூப்பள்ளி: தார்வாட் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஹூப்பள்ளிக்கு வருகிறார்.
ஹூப்பள்ளியில் நேற்று பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை (இன்று) ஹூப்பள்ளி வருகை தருகிறார். எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கால், பா.ஜ.,வுக்கு எந்த பின் விளைவுகளும் ஏற்படாது. ம.ஜ.த., ஒரு சுதந்திரமான கட்சி. பிரஜ்வல், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் என்பதால், அதிகம் பரபரப்பை ஏற்படுத்துகிறது. வழக்கு தொடர்பாக விசாரணை நடக்கிறது. தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்கும்.
உப்பு தின்றவன், தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என, முன்னாள் முதல்வர் குமாரசாமியே கூறியுள்ளார். பிரஜ்வல் வெளிநாடு சென்றதற்கு, பா.ஜ., மீது குற்றஞ்சாட்ட காங்கிரஸ் முயற்சிக்கிறது. பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல காங்கிரஸ் அனுமதித்தது ஏன்?
முதல்வர் சித்தராமையா, ரேவண்ணா இடையே ஒப்பந்தம் செய்து கொண்டதாக, மக்கள் பேசுகின்றனர். சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், பிரஜ்வலை ஏன் கைது செய்யவில்லை? அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும். இவர் வெளிநாடு செல்வார் என, மத்திய அரசு கனவு கண்டதா? இவ்வாறு அவர் கூறினார்.