முதல்வர் சித்து திட்டத்தை தவிடு பொடியாக்கிய அமித் ஷா
முதல்வர் சித்து திட்டத்தை தவிடு பொடியாக்கிய அமித் ஷா
ADDED : ஏப் 09, 2024 09:58 PM

சாம்ராஜ் நகர் : சாம்ராஜ் நகரில் தற்போதைய பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத்தை காங்கிரசுக்கு இழுக்க முயற்சித்த முதல்வர் சித்தராமையாவின் திட்டத்தை, அமித் ஷா முறியடித்தார்.
சாம்ராஜ் நகர் - தனி தொகுதியில், பா.ஜ., சார்பில் பால்ராஜ், காங்கிரஸ் சார்பில் சுனில் போஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதிக்குள், முதல்வர் சித்தராமையா எம்.எல்.ஏ.,வாக இருக்கும் வருணா சட்டசபை தொகுதியும் அடங்கியுள்ளது.
இதனால், காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், ஹனுாரில் ம.ஜ.த., தவிர, மற்ற ஏழில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் கூட இல்லை. தற்போதைய பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத்தின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.
ஏனென்றால், சீனிவாச பிரசாத், காங்கிரஸ் சார்பில், 1980, 1984, 1989, 1991 ஆகிய நான்கு தேர்தல்களிலும்; ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 1999ல் நடந்த தேர்தலிலும்; பா.ஜ., சார்பில், 2019ல் நடந்த தேர்தலிலும் என ஆறு முறை வெற்றி பெற்று எம்.பி.,யானார்.
இன்னமும் தொகுதியில் அவரது மவுசு குறையவில்லை. இதையறிந்த காங்கிரஸ் தலைவர்கள், அவரது தம்பி ராமசாமி, மருமகன் மோகன், தங்கை மகன் தீரஜ் பிரசாத் ஆகியோரை காங்கிரசுக்கு இழுத்தனர்.
காங்., வேட்பாளர் சுனில் போசும், சீனிவாச பிரசாத் வீட்டுக்கே சென்று ஆதரவு திரட்டினார். காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவும், மொபைல் போன் மூலம் பேசி கேட்டு கொண்டார்.
இதற்கிடையில், வரும் 12ம் தேதி, சாம்ராஜ் நகரின் கொள்ளேகாலில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்டமான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சீனிவாச பிரசாத்தை பங்கேற்க செய்ய, திரைமறைவில் முதல்வர் முயற்சிக்கிறார்.
இந்த தகவல் வெளியானதும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேரடியாக களமிறங்கி உள்ளார். கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வாலை, இரண்டு நாட்களுக்கு முன்னர், சீனிவாச பிரசாத் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பா.ஜ., வேட்பாளர் பால்ராஜும் அங்கு வந்தார். இருவரும், அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளனர். தங்களுடைய ஆதரவு எப்போதும் பா.ஜ.,வுக்கு இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
கட்சிகாரர்களை வெளியே அனுப்பி விட்டு, பா.ஜ., பொறுப்பாளர் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அமித் ஷா சொன்ன சில விஷயங்களை கூறியுள்ளார்.
பின்னர், தன் ஆதரவாளர்களை அழைத்து 'பா.ஜ.,வுக்கு தான் என் ஆதரவு, அனைவரும் பால்ராஜுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுங்கள்' என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
இதன் மூலம், வரும் 12ம் தேதி நடக்கும் காங்கிரஸ் மாநாட்டில் சீனிவாச பிரசாத் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. முதல்வர் திட்டத்துக்கு பா.ஜ., 'செக்' வைத்துள்ளது.

