'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவில் மூடப்படும் அமித் ஷா பேச்சு
'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவில் மூடப்படும் அமித் ஷா பேச்சு
ADDED : மே 09, 2024 12:53 AM
லக்கிம்பூர், ''இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாபர் மசூதியை சுட்டிக்காட்டி, அயோத்தி ராமர் கோவிலை மூடி விடுவர்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி, ஹார்தோய், கன்னோஜ் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ., பொதுக்கூட்டங்கள் நேற்று நடந்தன.
ஓட்டு வங்கி
இவற்றில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை காங்கிரஸ் தன் ஓட்டு வங்கிக்காக, 70 ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தது.
ஆனால், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், நீண்டகாலமாக நீடித்த ராம ஜென்ம பூமியின் சட்டப் போராட்டத்திற்கு தீர்வு கண்டதுடன், ராமர் கோவிலுக்கு பூமி பூஜை செய்து, கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.
இந்த விழாவிற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும், ஓட்டு வங்கி பாதிக்கப்படும் எனக் கருதி விழாவை புறக்கணித்தனர்.
தற்போது, சமாஜ்வாதியின் மூத்த தலைவர் அர்ராம் கோபால் யாதவ், இக்கோவில் தேவையற்றது எனவும் விமர்சித்து வருகிறார். எனவே, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பாபர் மசூதியை சுட்டிக்காட்டி அயோத்தி ராமர் கோவிலை மூட நடவடிக்கை எடுப்பர்.
இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் எனவும் கூறவில்லை; கொள்கை குறித்தோ, கோட்பாடு குறித்தோ தெரிவிக்கவில்லை.
ஆனால், பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, 400 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தால், இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என அக்கூட்டணியினர் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை குறைத்து, முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பறித்தது யார் என்பதை மக்கள் நன்கு அறிவர்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், அமேதியில் இருந்து வயநாட்டிற்கு சென்றார்; தற்போது, ரேபரேலியில் போட்டியிட உள்ளார். அங்கும் அவர் தோல்வியை தழுவுவார்.
யாத்திரை
அதன்பின், அவர் ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு ஓடி விடுவார். அந்த இடம் மட்டுமே அவருக்கானது. தேர்தலுக்கு முன், பாரத் நியாய யாத்திரை நடத்தினார்; தேர்தலுக்கு பின், 'காங்கிரசை தேடி' என்ற பெயரில் ராகுல் யாத்திரை மேற்கொள்ளும் நிலை உருவாகும்.
இண்டியா கூட்டணி தலைவர்கள், 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். அவற்றை கண்டறியும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அமைப்பை நாங்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 23 ஆண்டுகளில் மாநில முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்து வரும் நரேந்திர மோடி மீது இதுவரை, 25 பைசா கூட ஊழல் குற்றச்சாட்டு எழவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.