பணம் எடுக்க உதவுவதாக நடித்து மோசடி செய்த மாஜி ராணுவ வீரர்
பணம் எடுக்க உதவுவதாக நடித்து மோசடி செய்த மாஜி ராணுவ வீரர்
ADDED : மே 16, 2024 09:49 PM
புதுடில்லி:பணம் எடுக்க உதவுவதைப் போல நடித்து, ஏ.டி.எம்., கார்டுகளை மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி கரோல் பாக் பகுதியில் கடந்த 5ம் தேதி ஏ.டி.எம்., மையத்தில் தன்னுடைய பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏ.டி.எம்.,மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்தர் குமார் மீனா என்பவரை டில்லி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 192 ஏ.டி.எம்., கார்டுகள், 24 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு தங்க கம்மல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்
அவரிடம் நடத்திய விசாரணையில் ஹரியானா, ராஜஸ்தான், டில்லி முழுவதும் இதுபோன்ற 26 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதும் ராணுவத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இவரது சொந்த கிராமமான ராஜஸ்தான் மாநிலம், நியோரானாவில் 'ராபின்ஹுட்' என்று அழைக்கப்படுகிறார் என போலீசார் தெரிவித்தனர்.

