ADDED : மார் 31, 2024 11:12 PM

காங்கிரசின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த போதே, கொப்பால் லோக்சபா தொகுதியில், முதன் முறையாக சுயேச்சை வேட்பாளர் சிவமூர்த்தி சாமி அளவன்டி வெற்றி பெற்று, நாட்டின் கவனத்தை ஈர்த்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்று, 1952ல் முதல் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, நாட்டில் இருந்தது காங்கிரஸ் மட்டுமே. இதற்கு மாற்றாக வேறு எந்த கட்சியும் இருக்கவில்லை.
காங்கிரஸ் வெற்றி பெறுவது பெரிய விஷயமாகவே இல்லை. இத்தகைய சூழ்நிலையிலும், காங்கிரசை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் களமிறங்கி, வெற்றியும் பெற்றார்.
கொப்பால் லோக்சபா தொகுதியில், 1952ல் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் களமிறங்கினார். இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக சிவமூர்த்தி சாமி அளவன்டி போட்டியிட்டார்.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, சிவமூர்த்தி சாமிக்கு காங்கிரசில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், அவர் காந்தி கூறியபடி, காங்கிரசில் இருந்து விலகி இருந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 'காங்கிரசை கலைக்க வேண்டும். சுதந்திரத்துக்காக போராடிய கட்சியை, அரசியலுக்கு பயன்படுத்துவது சரியல்ல' என, காந்தி கூறியிருந்தார். இதற்கு கட்டுப்பட்டு சிவமூர்த்தி சாமி, காங்கிரசுக்கு செல்ல மறுத்தார். அந்த கட்சி தலைவர்களை கடுமையாக சாடினார்.
கொப்பாலில் சுயேச்சையாக களமிறங்கி, 43,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்., வேட்பாளரை தோற்கடித்தார். சுயேச்சை எம்.பி.,யாக பார்லிமென்டுக்குள் நுழைந்த போதும், காந்தியின் அறிவுரைப்படி நடந்து கொண்டார். பார்லிமென்டில் பேச வாய்ப்பு கிடைத்த போது, நாடு, கலாசாரம், சுதந்திர போராட்டம் என பல விஷயங்கள் குறித்து பேசினார்.
காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு அக்கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அன்றைய பிரதமர் நேரு தலையிட்டு, பேச்சை தொடரும்படி சிவமூர்த்தி சாமியிடம் கூறினார். இவரது பேச்சை நேரு கூர்ந்து கவனித்தார். சிவமூர்ச்சி சாமி 45 நிமிடங்கள் பேசினார். பேசி முடித்த பின் இவரை அருகில் அழைத்து பேசிய நேரு, 'கர்நாடக புலி' என வர்ணித்தார்.
அதன்பின், 1957 லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சிவமூர்த்தி, 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளரிடம் தோற்றார்.
ஆயினும், 1962 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மாற்றாக உருவான லோக்சேவா சங்கத்தின் சார்பில் போட்டியிட்டு சிவமூர்த்தி சாமி வெற்றி பெற்றார்
- நமது நிருபர் -.

