இருந்த ஒரு எம்.பி.,யும் அவுட்! பா.ஜ.,வுக்கு தாவிய ஆம் ஆத்மி
இருந்த ஒரு எம்.பி.,யும் அவுட்! பா.ஜ.,வுக்கு தாவிய ஆம் ஆத்மி
ADDED : மார் 28, 2024 02:20 AM
புதுடில்லி, ஆம் ஆத்மியின் ஒரேயொரு லோக்சபா எம்.பி.,யான சுஷில் குமார் ரிங்கு, 48, அக்கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
பஞ்சாபின் ஜலந்தர் லோக்சபா தொகுதிக்கு, கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது.
அப்போது, காங்கிரசில் இருந்து விலகி, ஆளும் ஆம் ஆத்மியில் இணைந்து போட்டியிட்ட சுஷில் குமார் ரிங்கு வெற்றி பெற்றார்.
லோக்சபாவில், ஆம் ஆத்மிக்கு இருந்த ஒரே எம்.பி., இவர் தான். லோக்சபாவில் பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்த இவர், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் ஆளாகி உள்ளார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பா.ஜ.,வில், சுஷில் குமார் ரிங்கு இணைந்தார்.
அவருடன், பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., ஷீத்தல் அங்குரலும் பா.ஜ.,வில் இணைந்தார்.
இருவரையும், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி, கட்சி தேசிய பொதுச்செயலர் வினோத் தாவ்டே ஆகியோர் வரவேற்றனர்.
பா.ஜ.,வில் இணைந்த பின், சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், ''பதவி ஆசைக்காக பா.ஜ.,வில் சேரவில்லை. பஞ்சாபின் வளர்ச்சிக்காகவும், ஜலந்தர் மக்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுத்தேன். வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெறுவது உறுதி,'' என்றார்.
வரும் தேர்தலில், பஞ்சாபில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என, கூறப்படுகிறது. லோக்சபாவில் இருந்த ஒரு எம்.பி.,யும் பா.ஜ.,வுக்கு தாவி உள்ளதால், ஆம் ஆத்மி நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.