போலீசாரை தாக்கி தப்ப முயன்ற விசாரணை கைதி சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கி தப்ப முயன்ற விசாரணை கைதி சுட்டுப்பிடிப்பு
ADDED : ஏப் 30, 2024 07:49 AM
கதக்: நான்கு பேரைக் கொன்ற வழக்கில் கைதானவர், போலீசாரை தாக்கி தப்பியோட முயற்சி செய்தார். அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
கதக்கின் பெடகேரி நகராட்சி பா.ஜ., துணைத்தலைவி சுனந்தா பாக்களே. இவரது கணவர் பிரகாஷ் பாக்களே. சில வாரங்களுக்கு முன்பு இவரது மகன் கார்த்திக், 27, உறவினர்கள் பரசுராம், 58, இவரது மனைவி லட்சுமி, 50, இவர்களின் மகள் ஆகாங்ஷா, 17, ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
விசாரணையில் சொத்துக்கு ஆசைப்பட்டு, பிரகாஷ் பாக்களேவின் முதல் மனைவியின் மகன் விநாயகா, கூலிப்படையினரை ஏவிக் கொலை செய்தது தெரிந்தது. விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், விநாயகா பாக்களே, 35, கூலிப்படையை சேர்ந்த பிரோஜ் காஜி, 29, உட்பட எட்டு பேரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
சம்பவ இடத்தை அடையாளம் காட்ட பிரோஜ் காஜியை, நேற்று மதியம் கதக்குக்கு போலீசார் அழைத்து வந்தனர். நர்குந்த் சாலையில் சென்றபோது, கதக் ஊரக போலீஸ் நிலைய எஸ்.ஐ., சிவானந்த் பாட்டீலின் மண்டையில் பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு, பிரோஜ் காஜி தப்பியோட முயற்சித்தார்.
இன்ஸ்பெக்டர் தீரஜ் ஷிந்தே, துப்பாக்கியால் சுட்டதில், காலில் குண்டு பாய்ந்து பிரோஜ் காஜி, கீழே விழுந்தார். இவரை கைது செய்த போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர். பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு, காயமடைந்த எஸ்.ஐ., சிவானந்த் பாட்டீலும் சிகிச்சை பெறுகிறார்.

