ADDED : ஜூன் 27, 2024 06:55 AM

சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கத்தால், வறண்டு கிடந்த நீர் வீழ்ச்சிகளில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுற்றுலா பயணியரை 'வா வா' என, கை வீசி அழைக்கின்றன. இத்தகைய நீர் வீழ்ச்சிகளில் வரவி கொள்ளா நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும்.
பெலகாவி மாவட்டம், வெயில் மாவட்டம் என, அழைக்கப்படுகிறது. இம்முறை கோடை காலத்துக்கு முன்பே, வெயில் வறுத்தெடுக்க துவங்கியது. சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தின் அனைத்து ஏரி, குளம், ஆறுகள் வறண்டன. நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து குறைந்தது.
தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. சில வாரங்களாக பரவலாக மழை பெய்கிறது. எனவே, நீர்வீழ்ச்சிகள் களைகட்டியுள்ளன. இவற்றில் வரவிகொள்ளா நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். பேரிரைச்சலுடன் தண்ணீர் வளைந்து, நெளிந்து பாய்ந்தோடி வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை காண சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
இளைஞர்கள், இளம் பெண்கள், சிறார்கள், மூத்த குடிமக்கள் என, குடும்பம், குடும்பமாக வருகின்றனர். 50 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் வீழ்ச்சியில் நனைந்து குஷி அடைகின்றனர். குதித்து நீச்சலடித்து விளையாடி புத்துணர்ச்சி அடைகின்றனர்.
சுற்றிலும் கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமையான வனப்பகுதியில் வரவிகொள்ளா நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. அமைதியான சூழ்நிலையை ரசிக்கவே, அதிகமானோர் வருகின்றனர். ஒரு நாள் சுற்றுலாவுக்கு, தகுதியான இடமாகும்.
நீர் வீழ்ச்சி அருகிலேயே, கற்குகையில் வரவி சித்தேஸ்வரா கோவில் உள்ளது. அருவியில் குளித்து, வரவி சித்தேஸ்வரரை பூஜிக்கின்றனர்.
பலரும் தின்பண்டங்கள், உணவு, குடிநீர் என, தேவையான பொருட்களுடன் வருகின்றனர். காலை முதல் மாலை வரை, நீர் வீழ்ச்சியில் விளையாடுகின்றனர். அதன்பின் கடவுளை தரிசனம் செய்துவிட்டு, மனதையும், உடலையும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி கொண்டு திரும்புகின்றனர்.
பெலகாவி, பைலஹொங்களாவில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் முனவள்ளி உள்ளது.
இங்கிருந்து நர்குந்த் செல்லும் சாலையில் 6 கி.மீ., தொலைவில் எக்கேரி என்ற கிராமத்தின், சாலை ஓரத்தில் வரவிகொள்ளாவுக்கு செல்லும் பாதை என்ற அறிவிப்பு பலகை உள்ளது. இங்கிருந்து 1 கி.மீ., தொலைவு சென்றால் வரவிகொள்ளா நீர் வீழ்ச்சியை அடையலாம்.
முனவள்ளி மற்றும் நர்குந்தில் இருந்து நீர் வீழ்ச்சிக்கு செல்ல, ஏராளமான வாகன வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர், வரவிகொள்ளா கிராசில் இறங்க வேண்டும்.