'நாங்க எல்லாம் அப்பவே'... செஸ் சாம்பியன் குகேஷூடனான நினைவுகளை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!
'நாங்க எல்லாம் அப்பவே'... செஸ் சாம்பியன் குகேஷூடனான நினைவுகளை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!
ADDED : டிச 14, 2024 06:50 PM

புதுடில்லி: உலகின் இளம் வயது சாம்பியன் குகேஷூடன் செஸ் விளையாடிய தருணம் குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் 18, சீனாவின் டிங் லிரெனை 32, தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். 13 சுற்று முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளி பெற்று, சம நிலையில் இருந்தனர்.
கடைசி, 14வது சுற்றில் லிரென் செய்த தவறை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்ற குகேஷ், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற வீரராக உருவெடுத்துள்ளார். அவருக்கு இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, குகேஷூடன் செஸ் விளையாடிய வீடியோவை பகிர்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவில், 'கடந்தாண்டு டெக் மகேந்திரா குளோபல் செஸ் லீக் தொடர் துபாயில் நடந்தது. அதில், ஆல்பைன் பைப்பர் அணிக்காக குகேஷ் விளையாடினார். உலகின் இளம் செஸ் சாம்பியனுடன் விளையாடிய செஸ் போட்டியை டிரா செய்துள்ளேன். (கருணையோடும், பெருந்தன்மையோடும் விளையாடினார்) இந்த வீடியோ என்னுடைய சந்ததியினருக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசாகும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.