பெண் எம்பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர் படம்; பா.ஜ., வெளியிட்டது
பெண் எம்பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர் படம்; பா.ஜ., வெளியிட்டது
UPDATED : மே 16, 2024 02:35 PM
ADDED : மே 16, 2024 10:14 AM

புதுடில்லி: ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டு, 72 மணி நேரம் ஆகியுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆம்ஆத்மியில் பெண்களுக்கு எதிராக, அராஜகம் நடக்கிறது என பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபின் குமாருக்கு, தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், ராஜ்யசபா ஆம் ஆத்மி பெண் எம்.பி., தாக்கப்பட்டதாகவும், கெஜ்ரிவாலின் அறிவுறுத்தலின்படி இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் உதவியாளர் பிபின் குமார் மற்றும் கெஜ்ரிவால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பகிர்ந்துள்ளார்.
72 மணி நேரம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 72 மணி நேரம் ஆகியும் பிபின் குமார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. கெஜ்ரிவால் அவரைப் பாதுகாக்கிறார். ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது. இந்த தகவலை, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நவீன் ஜெய்ஹிந்த் மற்றும் நிதின் தியாகி ஆகியோர் தெரிவித்தனர். ஒரு பெண் ராஜ்யசபா எம்.பி மீது தாக்குதல் நடந்துள்ளது. ஆம்ஆத்மியில் பெண்களுக்கு எதிராக, அராஜகம் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.