கர்நாடக அ.தி.மு.க.,வில் மாற்றம் வரும் தங்கவயலில் நிர்வாகி அன்பு நம்பிக்கை
கர்நாடக அ.தி.மு.க.,வில் மாற்றம் வரும் தங்கவயலில் நிர்வாகி அன்பு நம்பிக்கை
ADDED : ஏப் 12, 2024 05:42 AM

''கர்நாடக அ.தி.மு.க.,வில் ஏற்றம் வர மாற்றம் தேவைப்படுகிறது. தேசிய கட்சிகளுக்கு அ.தி.மு.க., சவால் விடும் நேரம் வரும்,'' என்று கர்நாடக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் மு.அன்பு தெரிவித்தார்.
கர்நாடகா அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார் ராஜினாமாவுக்கு பின், கட்சி தொண்டர்கள் விழிப்படைந்து உள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தங்கவயலை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மு.அன்பு அளித்த சிறப்பு பேட்டி:
கர்நாடகாவில் அ.தி.மு.க., சோர்வடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறதே?
கர்நாடகாவில் எம்.ஜி. ஆர்., ஜெயலலிதா பக்தர்கள் தான் அ.தி.மு.க.,வினர். இவர்கள் இல்லாத நிலையில் வந்திருப்பவர், தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி. கர்நாடக அ.தி.மு.க.,வினர் எங்கும் எதிலும் திசை மாறவில்லை. கட்சியின் தலைமையை ஏற்று நிர்வாகத்தை நடத்தியவரின் தகுதியின்மை தான் சோர்வுக்கு காரணம்.
லோக்சபா தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?
ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமை முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஒவ்வொருவரும் கட்டாயம் ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர். கர்நாடகாவில் அ.தி.மு.க., தேர்தல் களத்தில் இல்லை. ஆயினும், நாட்டின் வளர்ச்சிக்கு தகுதியானவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். கர்நாடக அ.தி.மு.க.,வினரை, சுதந்திரமாக சிந்தித்து வாக்களிக்குமாறு கட்சி பொது செயலர் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
கர்நாடக தேர்தல்களில் அ.தி.மு.க., போட்டியிடாமல் போனது ஏன்?
இது தவறு. கர்நாடக சட்டசபை, மாநகராட்சி, நகராட்சிகளின் பல தேர்தல்களில் அ.தி.மு.க., போட்டியிட்டுள்ளது. 1983ல் தங்கவயல் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தி, எம்.ஜி.ஆரே பிரசாரம் செய்தார். முதன் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் அ.தி.மு.க., உறுப்பினர் இருந்தார். இது போன்று, பெங்களூரு காந்திநகர் தொகுதியில் 1985லும், தங்கவயலில் 1989, 1999லும் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகளிலும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருந்து உள்ளனர். நானும், எனது மகள் அனிதாவும் கூட தங்கவயல் நகராட்சி கவுன்சிலராக இருந்து உள்ளோம்.
கட்சியில், அதிகாரத்தில் இருந்தவர்கள் சிலர், ஏறி வந்த ஏணியை மறந்து, மாற்று கட்சிக்கு தாவியதால் அவர்களின் அரசியலின் அத்தியாயமே முடிந்து போனது. சுயநலத்துக்காக துரோகம் செய்தவர்கள் மன்னிக்க முடியாதவர்கள் என்பதை காலம் நிரூபித்து உள்ளது.
தமிழக அ.தி.மு.க., வால் கர்நாடக தமிழருக்கு என்ன பயன்?
தங்கவயலில் 1982ல் நடந்த மொழிப் போரில் உயிர் நீத்த மோகன், பரமேஷ், பால்ராஜ், உதயகுமார், ஜெயகுமார், சண்முகம் ஆகிய ஆறு பேருக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியதை கர்நாடக மக்கள் மறக்க மாட்டார்கள்.
தங்கச் சுரங்கம் மூடப்பட்ட போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா 4,000 பேருக்கு தலா 40 கிலோ அரிசியை வழங்கி உதவினார். ஆண்டு தோறும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இதுவரை 11 பேருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன்.
கர்நாடகாவில் தொய்வில் உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்களா?
அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில் மக்கள் சேவைக்காகவே உள்ளது. மக்கள் பிரச்னைகளுக்காகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி தீர்வு கண்டிருக்கிறோம்.
கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த எங்கள் தலைமைக்கும் பொறுப்பு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின், கட்சியில் புதிய மாற்றம் வரும். ஒதுங்கி இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்படுவர்.
தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ள கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனும் ஆலமரத்துக்கு அழிவே கிடையாது. விழுதுகளாக தொண்டர்கள் இருக்கும் வரை திடமாகவே இருப்போம். அ.தி.மு.க., வின் அலைகள் ஓயாது.
கட்சியில் மாற்றம் வரும். அதுவே கட்சிக்கு ஏற்றமாக இருக்கும். பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வரட்டும். தேசிய கட்சிகளுக்கு அ.தி.மு.க., பெரும் சவாலாக திகழும் என்பது காலம் பதில் சொல்லும்.

