50 ஆண்டுகளில் இல்லாத கனமழை வெள்ளக்காடான ஆந்திர மாவட்டங்கள்
50 ஆண்டுகளில் இல்லாத கனமழை வெள்ளக்காடான ஆந்திர மாவட்டங்கள்
UPDATED : செப் 02, 2024 05:19 AM
ADDED : செப் 02, 2024 01:34 AM

விஜயவாடா: ஆந்திராவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்ததை அடுத்து, விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதை அடுத்து, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
ஆந்திராவில் விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா, அமராவதி, மங்களகிரி, ஏலுாரு, பாபட்லா, என்.டி.ஆர்., உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது.
விஜயவாடா, அமராவதி, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது பெய்த பலத்த மழையால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஆந்திர உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா நேற்று கூறியதாவது:
ஆந்திராவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. விஜயவாடா உள்ளிட்ட மாவட்டங்களில், 27 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், விபத்துகளில் சிக்கி, இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 294 கிராமங்களில் இருந்து, 13,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயவாடா, அமராவதி, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 62,644 ஹெக்டேர் நெல் பயிர்களும், 7,218 ஹெக்டேர் பழந்தோட்டங்களும் நீரில் மூழ்கின. அனைத்து மாவட்டங்களிலும் கட்டளை மையங்கள் அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மழை நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக மீட்கும்படி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று, மீட்புப் பணிகளை அவர் விரைவுபடுத்தினார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு ரயில் நிலையங்களின் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், 99 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. 54 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. 'ஆந்திரா, தெலுங்கானாவில் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக் கூடும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.