ADDED : ஆக 08, 2024 06:07 AM

பெங்களூரு புறநகரின் ஆனேக்கல்லில் முத்தியால மடுவு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நகரில் இருந்து, 40 கி.மீ., துாரத்திலும், ஆனேக்கல்லில் இருந்து, 5 கி.மீ., துாரத்திலும் உள்ளது.
முத்தியால மடுவு என்றால், முத்து பள்ளத்தாக்கு என்று பொருள். இந்த நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர், முத்து போன்று வெண்மையாக இருப்பதால், முத்தியால மடுவு என்ற பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.
பசுமையான மரங்கள்
சுற்றி பார்க்கும் இடமெல்லாம் பசுமையான மரங்கள், செடி, கொடிகளை காணலாம். அதற்கு நடுவில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. பறவைகளின் கீச், கீச் சத்தம் மனதிற்கு நிறைவை தருகின்றன.
வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, காட்டில் சற்று துாரம் நடந்து செல்ல வேண்டும். பாறைகளின் மீதிருந்து தண்ணீர் கொட்டும். இந்த பயணமே வித்தியாசமாக இருக்கும்.
தமிழகத்தின் ஓசூர், பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். நீர்வீழ்ச்சியில் குளித்து, அங்கேயே உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் ஒருமுறை குளியல் போடுவது தனி சுகத்தை தரும்.
மழை காலங்களில் மட்டுமே நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும்.
கோடை காலத்தில் நீர்வீழ்ச்சி இருப்பதே தெரியாது. எனவே தற்போது முத்தியால மடுவுக்கு செல்ல மிக சிறந்த காலம் என்றே சொல்லலாம். அருகிலேயே சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முத்தியால சுவாமி கோவிலும் அமைந்துள்ளது. காலையில் மட்டுமே பூஜை செய்யப்படும்.
குறிப்பாக, தடடகெரே ஏரி உள்ளது. இங்கு படகு சவாரிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாலை 6:00 மணிக்கு மேல் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி இல்லை. ஏனென்றால், பன்னரகட்டா தேசிய பூங்காவை ஒட்டி இருப்பதால், வன விலங்குகள் வரும் வாய்ப்பு உள்ளது.
பாறைகள்
காலையில் சென்று, மாலையில் வீடு திரும்ப ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக உள்ளது. ஆனேக்கல்லில் இருந்து, ஓசூர் அடுத்த தளி செல்லும் பஸ்சில் ஏறினால், முத்தியால மடுவு சென்றடையலாம். சொந்த வாகனத்தில் செல்வது சால சிறந்தது.
உணவை வெளியில் இருந்து வாங்கி செல்வது நல்லது. அங்கேயும் கர்நாடக சுற்றுலா துறைக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளது.
வனப்பகுதி என்பதாலும், பாறைகள் இருப்பதாலும் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்
.
- நமது நிருபர் -