ADDED : ஆக 16, 2024 10:54 PM

யாத்கிர்: அங்கன்வாடி சிறார்களுக்காக அரசு வழங்கிய உணவு தானியங்களை, ஊழியர்கள் கள்ள சந்தையில் விற்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமீப நாட்களாக அங்கன்வாடிகளில் நடக்கும் முறைகேடுகள், குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. சில நாட்களுக்கு முன், சிறார்களின் உணவு தட்டில் முட்டையை வைத்து விட்டு, மீண்டும் அதை ஊழியர்கள் எடுத்து கொண்ட சம்பவம் நடந்தது.
மற்றொரு அங்கன்வாடியில் வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில், செத்த எலி இருந்தது. அங்கன்வாடிகளில் நடக்கும் இத்தகைய சம்பவங்களை, அரசு தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்கும்படி, பலரும் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், அங்கன்வாடியில் உணவு தானியங்கள், முட்டைகளை திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது. யாத்கிர், ஹுனசகியின், ஹகரடகி கிராமத்தில் அங்கன்வாடி உள்ளது.
இங்கு பணியாற்றும் ஊழியர் உமா, சிறார்களுக்கு அரசு வழங்கிய உணவு தானியங்களை தன் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். கள்ள சந்தையிலும் விற்றுள்ளார்.
ஒரு நபரிடம், உணவு தானிய மூட்டையை பைக்கில் விற்பனைக்கு கொடுத்தனுப்பினார்.
இதை கிராமத்தினர் கவனித்து, தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பினர். 'அங்கன்வாடி ஊழியர் உமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.