முதல்முறை பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை
முதல்முறை பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை
UPDATED : ஜூலை 24, 2024 04:30 AM
ADDED : ஜூலை 24, 2024 01:40 AM

அனைவருக்கும் போதிய வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக, அரசு வகுத்துள்ள ஒன்பது முன்னுரிமை திட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை உருவாக்கி தரும் ஐந்து திட்டங்களுக்காக, 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 4.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவர். இதில், வேலை வாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை வரிசையில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதில் முதலாவதாக, அனைத்து துறைகளிலும் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை ஊக்கத் தொகையாக அரசு வழங்கும். அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரையிலான ஊக்கத் தொகை, வருங்கால வைப்பு நிதி கணக்கில் மூன்று தவணைகளாக செலுத்தப்படும். இத்திட்டத்தில், 2.10 கோடி இளைஞர்கள் பலன் பெறுவர்.
மாணவர்களுக்கு கடன்
உற்பத்தி துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உற்பத்தி துறையில் பணியில் சேரும் முதல்முறை ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட அளவு ஊக்கத் தொகையை வருங்கால வைப்பு நிதி வாயிலாக அரசு அளிக்கும்.
இத்திட்டம் நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதில், 30 லட்சம் இளைஞர்கள் பலன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை வழங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அனைத்து துறைகளிலும் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் கூடுதல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வாயிலாக மாதம் 3,000 ரூபாய் ஊக்கத் தொகை, இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த தொகை வேலை வாய்ப்பு வழங்கிய நிறுவனத்தின் பங்களிப்பாக சேர்க்கப்படும்.
வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக, பெண்கள் தங்கும் விடுதி மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்காக, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
நாடு முழுதும் 1,000 ஐ.டி.ஐ., கல்வி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படும். குறிப்பாக, நவீன தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை அறிந்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் திறன் மேம்பாடு பயிற்சி பெற்று, 20 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊக்குவிப்பு நிதியிலிருந்து உத்தரவாதத்துடன், 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களை எளிதாக்கும் வகையில், 'மாதிரி திறன் கடன் திட்டம்' மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டுக்கு 25,000 மாணவர்கள் பயன் பெறுவர்
உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் கீழ் பயன்பெற தகுதியற்ற நபர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டுக்கு, 3 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்பட உள்ள இந்த கடனுதவி, 1 லட்சம் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்க செய்யும் வகையில் மின்னணு முறையில் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிற்சி வாய்ப்புகள்
நாட்டில் உள்ள, 'டாப் 500' நிறுவனங் களில், 1 கோடி இளைஞர்களுக்கு அடுத்த ஐந் தாண்டுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, பயிற்சிக்கான செலவுகளை அந்நிறுவனங்களே ஏற்கும். பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகையும், ஒருமுறை உதவித் தொகையாக 6,000 ரூபாயும் அரசு அளிக்கும். இந்த பயிற்சி 12 மாதங்களுக்கு அளிக்கப்படும்.