புதுச்சேரி காங்., வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிப்பு
புதுச்சேரி காங்., வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிப்பு
ADDED : மார் 22, 2024 02:01 AM

புதுடில்லி, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஏற்கனவே இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டது.
இந்நிலையில், மூன்றாம் பட்டியலை அக்கட்சி நேற்றிரவு வெளியிட்டது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும், 57 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் குல்பர்காவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா போட்டியிடுகிறார்.
அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கம் பஹராம்பூர் தொகுதியில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், மஹாராஷ்டிராவின் சோலாபூர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் பிரனிதியும் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் ஏற்கனவே எம்.பி.,யாக உள்ள வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 139 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

