பெங்., விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
பெங்., விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 30, 2024 06:33 AM
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்திற்கு மீண்டும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தேவனஹள்ளியில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. முதல் முனையத்தில் இருந்து உள்நாட்டிற்கும், இரண்டாவது முனையத்தில் இருந்து வெளிநாட்டிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சில தினங்களுக்கு முன்பு, நாடு முழுதும் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இவற்றில் பெங்களூரு விமான நிலையமும் ஒன்று.
இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தின், முதல் முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறைக்குள், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, பயணியர் சிலர் சென்றனர். அங்குள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருந்த பேப்பரில், முதல் முனையத்தில் இன்னும் 25 நிமிடங்களில், வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த பயணியர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது.
ஆனால் வெடிகுண்டோ, சந்தேகம்படும்படியான பொருட்களோ சிக்கவில்லை. இதனால் புரளி என்று உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.