மற்றொரு 'நிமான்ஸ்' மருத்துவமனை தேவை மத்திய அரசிடம் எம்.பி., மஞ்சுநாத் கோரிக்கை
மற்றொரு 'நிமான்ஸ்' மருத்துவமனை தேவை மத்திய அரசிடம் எம்.பி., மஞ்சுநாத் கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2024 05:46 AM

: பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., டாக்டர் மஞ்சுநாத், பெங்களூரில் மற்றொரு நிமான்ஸ் மருத்துவமனை கட்டுவதில் ஆர்வம் காண்பிக்கிறார். இது குறித்து, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனையில், 16 ஆண்டுகள் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர் டாக்டர் மஞ்சுநாத்.
தன் பதவி காலத்தில் மருத்துவமனையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். பல ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
தேர்தல் வெற்றி
இம்முறை லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக களமிறங்கிய மஞ்சுநாத், தன் முதல் முயற்சியிலேயே, காங்கிரசின் செல்வாக்கு மிக்க துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷை தோற்கடித்தார். மருத்துவ துறையில் இவர் செய்த சேவையை கருதி, மக்கள் இவரை வெற்றி பெற வைத்து எம்.பி.,யாக்கி உள்ளனர்.
தற்போது தன் தொழில் அனுபவத்தை வைத்து, மருத்துவ துறையில் மாற்றங்களை கொண்டு வர, ஆர்வம் காண்பிக்கிறார். முதல் படியாக, பெங்களூரில் மற்றொரு நிமான்ஸ் மருத்துவமனை கொண்டு வர, திட்டமிட்டுள்ளார்.
தன் மாமனாரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுடன், டில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை, நேற்று முன்தினம் மஞ்சுநாத் சந்தித்தார். பெங்களூரில் மற்றொரு நிமான்ஸ் மருத்துவமனை கட்டும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக, அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
நிமான்ஸ் மருத்துவமனைக்கு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதனால் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை. மற்றொரு நிமான்ஸ் மருத்துவமனை கட்டுவதன் மூலம், பழைய மருத்துவமனை மீதான அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
கடந்த 1974 முதல் பெங்களூரில் சிறப்பான முறையில் செயல்படும், நாட்டின் ஒரே முக்கியமான மருத்துவமனையாகும். மத்திய சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
இது மனநலம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கான மருத்துவமனையாகும். குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவை வழங்குகிறது.
எண்ணிக்கை அதிகரிப்பு
மருத்துவமனை துவங்கப்பட்ட போது, தினமும் 250 நோயாளிகள் வந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை, 2,500 ஆக அதிகரித்துள்ளது.
நோயாளிகள் அதிகம் வருவதால் மருத்துவமனையால் சமாளிக்க முடியவில்லை.
இங்கு சிகிச்சைக்கு வரும் பலரும் ஏழைகள். இவர்களால் அதிகம் செலவிட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது.
எனவே, மற்றொரு நிமான்ஸ் மருத்துவமனை கட்டினால், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். மருத்துவமனை கட்ட, மாநில அரசு ஏற்கனவே 37 ஏக்கர் நிலம் தர அனுமதி அளித்துள்ளது. எனவே விரைவில் மற்றொரு நிமான்ஸ் மருத்துவனை கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.