ADDED : செப் 01, 2024 11:42 PM

ஹூப்பள்ளி: ''காங்கிரசார், பார்ட் டைம் ஹிந்துக்கள். இந்த கட்சி எப்போதும் ஹிந்து விரோதி கட்சி தான்,'' என மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் எப்போதும், ஹிந்துக்களுக்கு எதிரான கட்சிதான். இந்த கட்சியினர், பார்ட் டைம் ஹிந்துக்கள். காங்கிரசாருக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதோ, இல்லையோ தெரியாது. இதுவரை நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
காங்கிரசார், மத்திய அமைச்சர் குமாரசாமி மீது குற்றம்சாட்டுகின்றனர். 2018ல், காங்கிரசாரே, குமாரசாமியின் காலில் விழுந்து முதல்வராக்கினர். இப்போது இக்கட்சியினருக்கு ஞானோதயம் ஏற்பட்டதா.
சித்தராமையா சிறைக்கு செல்வார் என, நாங்கள் ஆருடம் கூறவில்லை. ஆனால் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதற்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
தேவராஜ் அர்சை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது காங்கிரசார். ராகுலே தங்கள் தலைவர் என, கூறியபடி நடமாடுகின்றனர்.
இதே ராகுலின் பாட்டி இந்திராதான், தேவராஜ் அர்சை பதவியில் இருந்து நீக்கினார். அவரை அதிகமாக அவமதித்தனர். பங்காரப்பாவை பதவியில் இருந்து நீக்கியது யார். செய்வதும், பேசுவதும் காங்கிரசார் தான்.
கவர்னராக இருந்த பரத்வாஜ், எடியூரப்பா மீது விசாரணைக்கு அனுமதி அளித்த போது சரி; தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தால், தவறா. காங்கிரசார் வால் எரிந்து போன பூனையை போன்று நடமாடுகின்றனர். தினம் பொழுது விடிந்தால், கவர்னரை விமர்சிக்கின்றனர்.
சித்தராமையாவுக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளதா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வர். ஒரே ஆண்டில் காங்கிரசின் செல்வாக்கு என்னவானது என்பதை, மக்கள் பார்த்துள்ளனர். கர்நாடகாவில் ஆட்சி இயந்திரத்தை முழுதாக பயன்படுத்தியும், அக்கட்சியினருக்கு லோக்சபா தேர்தலில் ஒன்பது இடங்கள்தான் கிடைத்தது. அரசு ஊழலில் ஈடுபட்டாலும், குளறுபடி செய்தாலும் எதிர்க்கட்சியினர் பேசக்கூடாது என்றால் எப்படி. இது ஜனநாயக நாடு.
இவ்வாறு அவர் கூறினார்.