ADDED : ஆக 02, 2024 10:15 PM

பல்லாரி : திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.
பல்லாரி சிருகுப்பா அதானி சாலையில் வசித்தவர் ராஜா, 23. இவரது உறவுக்கார பெண்ணின் தோழி பவித்ரா, 20. தோழி வீட்டிற்கு பவித்ரா அடிக்கடி வந்து செல்வார். அப்போது, ராஜாவுக்கும், பவித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். காதல் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் வெவ்வேறு ஜாதி என்பதால், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து, காதல் ஜோடி வெளியேறியது. அவர்களை பெற்றோர் தேடினர். நேற்று காலை அதானி சாலையில் உள்ள நிலத்தில், வாயில் நுரைதள்ளிய நிலையில் இருவரும் இறந்து கிடந்தனர்.
உடல்களின் அருகில் விஷ பாட்டில்கள் கிடந்தன. இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. சிருகுப்பா போலீசார் விசாரிக்கின்றனர்.