ADDED : ஆக 23, 2024 06:21 AM

பெங்களூரு: பெங்களூரு உயர் மறை மாவட்ட பேராயத்திற்கு, இரண்டு புதிய துணை பேராயர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு உயர் மறை மாவட்டத்திற்கு ஆரோக்கிய ராஜ் சதீஷ்குமார், ஜோசப் சூசைநாதன் ஆகியோர் புதிய துணை பேராயர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் இருவரும் பேராயத்தின் முன்னேற்றத்திற்கு, முக்கிய பங்கு ஆற்றுவர் என்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
புதிய துணை பேராயர் ஆரோக்கியராஜ் சதீஷ்குமார், குட்டதஹள்ளியில் உள்ள, புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை பட்டதாரியான இவர், கடந்த 1994ல் தனது மத பயணத்தை துவங்கினார். பல தேவாலயங்களில் மக்களுக்கு சேவை ஆற்றி உள்ளார்.
மற்றொரு துணை பேராயர் ஜோசப் சூசைநாதன், கோலார் மாவட்டம், தங்கவயலை சேர்ந்தவர். தற்போது பெங்களூரு ரிச்மென்ட் ரோட்டில் உள்ள, புனித இருதய தேவாலயத்தின் பங்கு தந்தையாக உள்ளார்.
இவர்கள் இருவரும், பெங்களூரு துாய சவேரியார் பேராலயத்தில் நாளை காலை 9:00 மணிக்கும் நடக்கும் நிகழ்வில் பதவியேற்கின்றனர். இதில் உயர் மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ உட்பட அருட்தந்தைகள் பங்கேற்கின்றனர்.

