ADDED : மார் 22, 2024 05:49 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பா.ஜ., சார்பில் பூத் மட்டத்தில் இருந்து, லோக்சபா தொகுதி வரை பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, வெற்றி வியூகம் வகுத்துள்ளனர்.
கர்நாடகாவில், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், பா.ஜ., 25ல் வெற்றி பெற்று அபார சாதனை படைத்தது. பா.ஜ., ஆதரவு சுயேச்சை, ம.ஜ.த., காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
அபார சாதனை
அப்போது, மாநிலத்தில் ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆட்சி இருந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2019 போன்று, 2024லிலும் அபார சாதனை படைக்க வேண்டும் என்று பா.ஜ., மேலிடம், மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே பா.ஜ., தலைவர்கள் பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம், 28க்கு 28 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர். இதற்கான ஆயத்த பணிகளிலும் இறங்கியுள்ளனர்.
பூத் மட்ட அளவில் கட்சியை பலப்படுத்தும் பணி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கின. மத்திய அரசின் திட்டங்கள், மாநில மக்களுக்கு கிடைக்கும் வகையில், அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
பூத் மட்ட குழுக்கள்
ஏற்கனவே பூத்மட்ட குழுக்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கி, வீடு வீடாக சென்று சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துணையாக, ஐந்து பூத்களை சேர்த்து சக்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமித்து, அவர் அந்த ஐந்து பூத்களையும் மேற்பார்வை செய்ய வேண்டும். ஐந்தாறு சக்தி மையங்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும், சட்டசபை தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர், லோக்சபா தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என பல்வேறு கட்டங்களாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி மேலிடம் அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை, இந்த பொறுப்பாளர்கள், அவர்களுக்கு கீழ் உள்ள ஒருங்கிணைப்பாளர் வாயிலாக பூத்மட்ட தொண்டர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வர்.
இப்படி லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, பா.ஜ., திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

