கண்காணிப்பு கேமரா முறைகேடு ஜெயினிடம் விசாரிக்க ஒப்புதல்
கண்காணிப்பு கேமரா முறைகேடு ஜெயினிடம் விசாரிக்க ஒப்புதல்
ADDED : ஜூலை 06, 2024 10:19 PM

புதுடில்லி'டில்லியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து, கவர்னர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
டில்லி மாநகர் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்காக டெண்டர் எடுத்திருந்த ஒரு நிறுவனத்துக்கு 16 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய, அப்போது அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் 7 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17-Aன் கீழ், சத்யேந்தர் ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற, ஊழல் தடுப்பு இயக்குநரகம் துணைநிலை கவர்னரிடம் அனுமதி கேட்டு கோப்பு அனுப்பி இருந்தது. அதைப் பரிசீலனை செய்த கவர்னர் சக்சேனா, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி அனுமதி பெற்று, விசாரணையை துவக்க ஒப்புதல் அளித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டில்லி மாநகர் முழுதும் 571 கோடி ரூபாய் செலவில் 1.4 லட்சம் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நோடல் அதிகாரியாக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்தார்.
ஏற்கனவே பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயின், கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.