அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., துவங்க ஒப்புதல்
அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., துவங்க ஒப்புதல்
ADDED : ஜூன் 25, 2024 05:00 AM

பெங்களூரு : ''அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்க முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்துள்ளார்,'' என, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள், பல போராட்டங்கள் நடத்தினர்.
தங்களின் கோரிக்கைகளை, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரிடமும் தெரிவித்தனர். அவரும், 'இது தொடர்பாக முதல்வரிடம் பேசுகிறேன்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்த பின், லட்சுமி ஹெப்பால்கர் அளித்த பேட்டி:
கல்யாண் கர்நாடகா பகுதியை தவிர, மாநிலம் முழுதும் உள்ள அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்குவது குறித்து, நிபுணர் குழு அமைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். குழந்தைகளுக்கு தரமான கல்வி, சத்தான உணவு வழங்குவதே எங்கள் குறிக்கோள். அனைத்து அங்கன்வாடிகளிலும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் பின்னணியில், சம்பந்தப்பட்ட துறை மூலம், அங்கன்வாடிகளை சீரமைத்து, மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், பைகள் வழங்கப்படும். இங்கு கன்னடம், ஆங்கில மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படும்.
இது தொடர்பாக ஏற்கனவே அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்களிடம் பேசப்பட்டு உள்ளது. அங்கன்வாடி ஆசிரியர்களாக 9,000 பட்டதாரிகளும், 1,500 முதுகலை பட்டதாரிகளும் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.