இளம்பெண் மீதான மோகம் ரூ.1.40 லட்சம் இழந்த அர்ச்சகர்
இளம்பெண் மீதான மோகம் ரூ.1.40 லட்சம் இழந்த அர்ச்சகர்
ADDED : ஆக 22, 2024 03:58 AM
மாண்டியா: மாண்டியா மாவட்டம், பாண்டவபுராவின், பட்டசோமனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விஜய்குமார், 60. இவர் கிராமத்தில் உள்ள சிவசைலம் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுகிறார். தன் குடும்பத்தைப் பிரிந்து, தனியாக வசிக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு, இவருக்கு பேஸ்புக் மூலம், சிரி ஸ்ரேஷ சரிதா என்ற அழகான இளம்பெண் அறிமுகமானார். தினமும் விஜய்குமாருடன், மொபைல் போனில் சாட்டிங் செய்தார். தன் தனிப்பட்ட விஷயங்களை, இந்த பெண்ணுடன் பகிர்ந்து கொண்டார்.
விஜய்குமார் தனியாக வசிப்பதை, அவரிடம் பணம் இருப்பதை சிரி ஸ்ரேஷ சரிதா தெரிந்து கொண்டார். கவர்ச்சிகரமாக பேசி விஜய்குமாரை தன் வலையில் விழ வைத்தார். தனக்கு உடல் நலம் இல்லை, சிகிச்சை பெற வேண்டும், வீட்டில் பிரச்னை என, பல காரணங்களை கூறி, 'போன் பே' வழியாக 1.40 லட்சம் ரூபாய் வரை பெற்றார்.
நேரில் சந்திக்க வேண்டும் என, விஜய்குமார், சரிதாவுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கினார். இன்று சந்திக்கலாம், நாளை சந்திக்கலாம் என ஆட்டம் காண்பித்த சரிதா, பேஸ்புக்கை பிளாக் செய்தார். மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்து கொண்டார்.
ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்ட விஜய்குமார், மண்டியா நகர சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, அப்பெண்ணை கண்டுபிடிக்கமுயற்சிக்கின்றனர்.
இளம்பெண்ணின் மோச வலையில் விழுந்த, 60 வயது அர்ச்சகர் 1.40 லட்சம் ரூபாயை இழந்தார்.