ம.பி.,யின் போஜ்சாலா வளாகத்தில் தொல்லியல் ஆய்வு துவங்கியது
ம.பி.,யின் போஜ்சாலா வளாகத்தில் தொல்லியல் ஆய்வு துவங்கியது
ADDED : மார் 23, 2024 12:48 AM

தார் மத்திய பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்சாலா வளாகத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல் ஆய்வு துறையினர் நேற்று காலை அறிவியல் ரீதியான ஆய்வை துவங்கினர்.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள தார் மாவட்டத்தில், மிகப் பழமையான போஜ்சாலா வளாகம் உள்ளது. இதை, கமல் மவுலா மசூதி எனக் கூறி வரும் முஸ்லிம்கள், பல ஆண்டுகளாக அங்கு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வளாகத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதி கோவில் இருந்ததாகவும், அதை மறைத்து மசூதி எழுப்பப்பட்டுள்ளதாகவும் ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடந்த 2003 ஏப்., 7ல் இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் பிறப்பித்த உத்தரவுப்படி, செவ்வாய் கிழமை தோறும் ஹிந்துக்கள் இந்த வளாகத்தில் பூஜை செய்யவும், முஸ்லிம்கள் வெள்ளி கிழமையன்று தொழுகை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், போஜ்சாலா வளாகத்தில் தொல்லியல் துறையினரின் அறிவியல்பூர்வ ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி, ஹிந்து அமைப்புகள் ம.பி., உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் தொல்லியல் ஆய்வுகளை முடிக்கும்படி கடந்த 11ல் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, போஜ்சாலா வளாகத்துக்கு தொல்லியல் ஆய்வு துறையினர் நேற்று அதிகாலை வந்தனர்.
அவர்களுடன் மாவட்ட நிர்வாகத்தினரும், மூத்த போலீஸ் அதிகாரிகளும் உடன் வந்தனர்.
அப்பகுதி முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மதியம் வரை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பின்னர் புறப்பட்டு சென்றனர்.
அந்த இடத்தில், வழக்கம் போல ஹிந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

