எம்.பி.,க்கள் ஆண்களா, பெண்களா? 'மாஜி' மத்திய அமைச்சர் 'டவுட்'
எம்.பி.,க்கள் ஆண்களா, பெண்களா? 'மாஜி' மத்திய அமைச்சர் 'டவுட்'
ADDED : செப் 07, 2024 07:37 AM

ஹூப்பள்ளி: ''கர்நாடக எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர்; அவர்கள் ஆண்களா, பெண்களா?'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த ஒன்றரை ஆண்டாக, மாநில காங்கிரஸ் அரசும், எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டு, காலத்தை கடத்துகின்றன. எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியாக பணியாற்றவில்லை.
'மூடா' மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு சர்ச்சையில், மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் மூழ்கியுள்ளன. இதனால் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன.
வேலையில்லா திண்டாட்டம், வறட்சி, வெள்ளப்பெருக்கு மக்களை வாட்டி வதைக்கிறது. பொதுப்பணித் துறை பணிகள், நீர்ப்பாசனம் உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை பாக்கி வைத்துள்ளன. மேலும் சில நாட்கள் கடந்தால் ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
பா.ஜ.,வினர், இப்போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டுகின்றனர். முதலில் பா.ஜ.,வினர் என்ன செய்தனர் என்பதை நினைவுகூரட்டும். கர்நாடக எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர். இவர்கள் ஆண்களா, பெண்களா?
மஹதாயி உட்பட நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசுக்கு எம்.பி.,க்கள் நெருக்கடி கொடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் எதுவும் பேசவில்லை.
மாநிலத்தின் வளங்கள் எங்கு செல்கின்றன? இது பற்றி மக்கள் விழிப்படைய வேண்டும். மாநிலத்தின் உரிமையை, மாநிலத்துக்கு கொடுக்க வேண்டும். மத்திய அரசிடம் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.