பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் சுங்கச்சாவடிகள் அமைப்பதா? ஐகோர்ட் விளாசல்
பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் சுங்கச்சாவடிகள் அமைப்பதா? ஐகோர்ட் விளாசல்
ADDED : பிப் 27, 2025 01:21 AM

ஜம்மு: பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன், காளான்கள் போல சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதாக ஜம்மு - -காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், டில்லி -- அமிர்தசரஸ் -- கத்ரா விரைவுச் சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவு சாலையுடன் இணைக்கும் ஜம்மு - -பதன்கோட் நெடுஞ்சாலையில் லகான்பூர், பான் இடையே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதை ரத்து செய்யக்கோரி ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு விபரம்:
மக்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன் காளான்கள் போல சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. சுங்கச்சாவடி கட்டணங்களால் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மட்டுமல்லாமல், தனியார் ஒப்பந்ததாரர்களும் கோடிக்கணக்கில் பணம் குவித்து, தங்களை வளமாக்கிக் கொள்கின்றனர்.
மக்களிடம் பணம் வசூலிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படக் கூடாது. சுங்கக் கட்டணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.
ஜம்மு -- காஷ்மீரில் லகான்பூர், பான் சுங்கச்சாவடிகளில் கடந்த 2024, ஜன., 26க்கு முன் இருந்த கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
எந்த சார்பும் இல்லாத சுயமான ஆய்வாளரைக் கொண்டு சுங்கக்கட்டணங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஜம்மு -- காஷ்மீரில் 60 கி.மீ., இடைவெளிக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக் கூடாது.
அப்படி ஏதேனும் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் கூடுதல் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும். குற்றப் பின்னணி உடையவர்களை சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமிக்கக் கூடாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவைத் தொடர்ந்து, வைஷ்ணோ தேவி கோவில் உள்ளிட்ட ஜம்மு - -காஷ்மீரில் உள்ள புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் பயன் அடைவர்.