பிளவுபடுத்தும் பிரதமரா நீங்கள்? மோடிக்கு கார்கே பகிரங்க கடிதம்
பிளவுபடுத்தும் பிரதமரா நீங்கள்? மோடிக்கு கார்கே பகிரங்க கடிதம்
ADDED : மே 03, 2024 12:47 AM

புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், 'தோல்வியை தவிர்ப்பதற்காக பொய்களால் நிறைந்த பிளவுபடுத்தும் வகுப்புவாத பேச்சுக்களில் ஈடுபட்ட பிரதமர் என்றே மக்கள் உங்களை நினைவில் வைத்திருப்பர்' என, குறிப்பிட்டுள்ளார்.
கவலை
லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த பின், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதினார். அதில், 'காங்கிரஸ் கட்சி எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து, அவர்களின் ஓட்டு வங்கிக்கு வழங்கிவிடும்' என, குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அதன் விபரம்:
மக்களிடம் எதை சொல்ல வேண்டும் என்பது குறித்து தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை கண்டேன். அந்த கடிதத்தின் தொனி மற்றும் உள்ளடக்கம், நீங்கள் மிகுந்த கவலை மற்றும் விரக்தியில் இருப்பதை காட்டுகிறது. எனவே தான் பிரதமர் பதவிக்கு பொருந்தாத மொழியை பயன்படுத்தி உள்ளீர்கள்.
மக்கள் புத்திசாலிகள்
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை கூறினால் உண்மையாகி விடாது. எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றை படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு மக்கள் புத்திசாலிகள்.
காங்., தேர்தல் அறிக்கை மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு குறித்து உங்களுடனோ அல்லது உங்கள் கட்சி தலைவர்களுடனோ விவாதிக்க தயாராக உள்ளதாக சவால் விடுகிறோம்.
இந்த தேர்தல் முடிந்ததும், தோல்வியில் இருந்து தப்பிக்க பொய்களால் நிறைந்த பிளவுபடுத்தும் வகுப்புவாத பேச்சுக்களில் ஈடுபட்ட பிரதமர் என்றே மக்கள் உங்களை நினைவில் வைத்திருப்பர்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.