ADDED : ஜூன் 05, 2024 10:12 PM
புட்டேனஹள்ளி : தாய், தந்தைக்கு இடையே ஏற்பட்ட சண்டையை விலக்க சென்ற மகன், தந்தையால் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரின், ஜரகனஹள்ளியில் வசிப்பவர் பசவராஜ், 50; லாரி ஓட்டுனர். இவரது மகன் யஷ்வந்த்குமார், 25, தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றினார்.
குடும்ப பிரச்னை காரணமாக, பசவராஜுக்கும், அவரது மனைவிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் நடக்கும். இவர்களை மகன் சமாதானம் செய்வது வழக்கம். நேற்று காலை 9:00 மணியளவில் ஏதோ காரணத்தால், தம்பதி சண்டை போட்டனர். வீட்டில் இருந்த மகன் யஷ்வந்த் குமார், பெற்றோரை சமாதானம் செய்ய முயற்சித்தார்.
ஆயினும் பசவராஜும், அவரது மனைவியும் பரஸ்பரம் அடித்து கொண்டனர். மகன் யஷ்வந்த்குமார், இடையில் நுழைந்தார். அப்போது கையில் இருந்த கத்தியால், பசவராஜ், தன் மகன் கழுத்தில் குத்தினார். படுகாயமடைந்து விழுந்த அவரை தந்தையே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் யஷ்வந்த்குமார் உயிரிழந்தார்.
புட்டேனஹள்ளி போலீசார், பசவராஜை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.