அர்ஜுனா விருது வென்ற கபடி வீராங்கனை மம்தா அர்ஜுனா விருது வென்ற கபாடி வீராங்கனை
அர்ஜுனா விருது வென்ற கபடி வீராங்கனை மம்தா அர்ஜுனா விருது வென்ற கபாடி வீராங்கனை
ADDED : செப் 06, 2024 05:58 AM

கிராமப்புறங்களில் தொடையை தட்டி விளையாடும், கபாடிக்கு எப்போதும் மவுசு உண்டு. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் விளையாடிய கபாடியை, தற்போது பெண்களும் விளையாடுகின்றனர். இந்திய கபடி பெண்கள் அணியின் கேப்டனாக, கர்நாடக வீராங்கனை மம்தா பூஜாரி இருந்து உள்ளார்.
கடலோர மாவட்டமான உடுப்பியின் கார்கலாவை சேர்ந்த போஜா பூஜாரி - கிட்டி பூஜாரி தம்பதியின் மகள் மம்தா பூஜாரி. 1986ல் பிறந்தார். சிறுவயதில் இருந்தே விளையாட்டு மீது இவருக்கு தீராத காதல் இருந்தது.
பள்ளி நாட்களில் கைப்பந்து, குண்டு எறிதலில் அவருக்கு ஆர்வம் இருந்தது. கல்லுாரி படிப்பை நெருங்கும்போது, கபடி மீது ஆர்வம் ஏற்பட்டது.
ஆண்கள் எப்படி கபாடி விளையாடுகின்றனர் என்று கூர்ந்து கவனித்தார். பெண் பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சியும் பெற்றார். கல்லுாரியில் உள்ள கபடி அணியில் இணைந்தார்.
தமிழகத்தின் திருநெல்வேலியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடந்த போட்டியில், மங்களூரு பல்கலைக்கழக அணி சார்பில் களம் இறங்கி மம்தா அசத்தினார்.
அவரது ஆட்டத்தை பார்த்து அசந்து போன தேர்வாளர்கள், இந்திய பெண்கள் கபடி அணிக்கு கொண்டு வந்தனர்.
பல்வேறு போட்டிகளில் அணி வெற்றி பெற தனது பங்களிப்பு அளித்தார்.
அணியின் கேப்டனாக இருந்த, இவரது தலைமையில் 2012ல் நடந்த முதல் உலகக்கோப்பை பெண் கபடி போட்டியில், இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தேசிய அளவில் 9 முறை; உலக அளவில் 11 முறை தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இவரது விளையாட்டுத் திறனை கவுரவிக்கும் வகையில், 2014ல் 'அர்ஜுனா விருது' வழங்கப்பட்டது.
கர்நாடக அரசின் இரண்டாவது பெரிய விருதான ராஜ்யோத்சவா பிரசாஷ்தி விருதும் கிடைத்தது.
கபடி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றவர், தற்போது தென் மத்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்.
- நமது நிருபர் -