அர்க்காவதி நில மறு அறிவிப்பு: கவர்னருக்கு பா.ஜ., ரவி கடிதம்
அர்க்காவதி நில மறு அறிவிப்பு: கவர்னருக்கு பா.ஜ., ரவி கடிதம்
ADDED : ஆக 25, 2024 09:57 PM

பெங்களூரு: 'அர்க்காவதி லே -- அவுட் சட்டவிரோத நில மறு அறிவிப்பு மற்றும் ஊழல் தொடர்பான, நீதிபதி கெம்பண்ணா அறிக்கையை, பகிரங்கப்படுத்தும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிடவேண்டும்' என, கவர்னரிடம், பா.ஜ., - எம்.எல்.சி., ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, ரவி எழுதிய கடிதம்:
இதற்கு முன் காங்கிரஸ் அரசு இருந்த போது, 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அர்க்காவதி லே - அவுட் தொடர்பாக, 852 ஏக்கர் நிலம் நில மறு அறிவிப்பு செய்யப்பட்டது என்பதை, உங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கடந்த 2014ல் முதல்வராக இருந்த சித்தராமையா, ஊழல் குறித்து விசாரணை நடத்த, நீதிபதி கெம்பண்ணா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார். கமிஷனும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தது.
கமிஷன்களின் விசாரணை அறிக்கைகள், பொது ஆவணங்களாகும். இதை பொது மக்கள் தெரிந்து கொள்ள செய்வது, அரசின் பொறுப்பாகும். ஆனால் இதுவரை கமிஷன் அளித்த அறிக்கையை, அரசு வெளியிடாமல் இருப்பது, சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது.
முதல்வரின் அலுவலகம், அந்த அறிக்கையை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடவில்லை. மாநிலத்தின் மக்கள் பிரதிநிதியாக, நானும் அறிக்கையை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். சித்தராமையா அரசு, அறிக்கையை வெளியிடாமல், மூடி மறைக்கிறது.
அறிக்கையை பகிரங்கப்படுத்தும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் ஊழலுக்கு எதிராக, கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்பதை, நிருபிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

