UPDATED : ஏப் 14, 2024 12:54 AM
ADDED : ஏப் 14, 2024 12:49 AM

புதுடில்லி : உலகின் மிகவும் உயர மான போர்க்களம் என அறியப்படும் சியாச்சினில், நம் ராணுவம் முகாம் அமைத்து, 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இமயமலைத் தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரம் உலகின் மிக உயர்ந்த ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலம் ஆகும்.
இங்கு பணியில் இருக்கும் வீரர்கள் உறைபனி போன்ற உயிருக்கு ஆபத்தான வானிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
'ஆப்பரேஷன் மேக்துாத்'
கடல் மட்டத்தில் இருந்து, 18,875 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதியை, 1984 ஏப்., 13ல், 'ஆப்பரேஷன் மேக்துாத்' என்ற பெயரில், நம் ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
நேற்றுடன், சியாச்சினில் ராணுவம் அமைக்கப்பட்டு, 40 ஆண்டுகள் நிறைவடைந்தன. கடந்த 40 ஆண்டுகளில், சியாச்சின் போர்க்களத்தை நம் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வலிமைப்படுத்தி உள்ளது.
தற்போது அங்கு, கனரக ஹெலிகாப்டர்கள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம், அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் வாகனங்களை இயக்க முடியும்.
இதுகுறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சியாச்சின் பனிச்சிகர பகுதிகளில் நம் ராணுவத்தின் கட்டுப்பாடு, இணையற்ற வீரம் மட்டும் போற்றுவதாக இல்லாமல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தளவாட மேம்பாடுகளின் நம்ப முடியாத பயணத்தையும் குறிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், தற்போது பணியில் உள்ள வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன. மேலும், சிறப்பு ஆடைகள் மற்றும் மலையேறும் உபகரணங்களும் கிடைப்பதால், வீரர்களின் வாழ்க்கைச் சூழல் மேம்பட்டுள்ளது; செயல்பாட்டுத் திறன்களும் மேம்பட்டுள்ளன.
நடவடிக்கை
ஒவ்வொரு வீரருக்கும் வானிலை கணிப்பு கருவி இருப்பதால், பனிச்சரிவு போன்ற தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்கின்றனர். சியாச்சினில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரியில், ராணுவத்தின் பொறியாளர் படையைச் சேர்ந்த கேப்டன் ஷிவா சவுகான், சியாச்சின் பனிச்சிகரத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
இதன் வாயிலாக, சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார்.

