ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் ராணுவ வீரர், பயங்கரவாதி பலி
ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் ராணுவ வீரர், பயங்கரவாதி பலி
ADDED : ஜூலை 25, 2024 01:26 AM
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்; பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குவோட் பகுதியில், கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பயங்கரவாதிகள் திருப்பி சுட்டனர்.
இரு தரப்பினர் இடையே நீடித்த துப்பாக்கி சண்டையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்; ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.