ADDED : ஆக 05, 2024 12:57 AM

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில், இந்தியா - சீனா எல்லையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரு ஆண்டுகளுக்கு முன் மாயமான நிலையில், அவர்களை சீன ராணுவத்தினர் பிடித்து வைத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சலின் அஞ்சாவ் மாவட்டத்தின் சாக்லகம் என்ற பகுதியில், இந்தியா - சீனா எல்லையில் உள்ள உயரமான பகுதியில், மருத்துவ மூலிகைகளை தேடி, படேலும் டிக்ரோ, 35, அவரது உறவினர் பைன்சி மன்யு, 37, ஆகியோர், 2022 ஆக., 19ல் சென்றனர். அதன் பின் இருவரையும் காணவில்லை.
இது குறித்து, டிக்ரோவின் சகோதரர் டிஷான்சோ சிக்ரோ, 2022 அக்., 9ல், போலீசில் புகார் அளித்தார். எனினும், இருவர் பற்றிய எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், டிஷான்சோ சிக்ரோ நேற்று கூறியதாவது:
டிக்ரோ, பைன்சி மன்யு ஆகியோர், சீன ராணுவத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை, சீன ராணுவ அதிகாரிகளின் கவனத்துக்கு நம் ராணுவத்தினர் எடுத்துச் சென்றனர். எனினும் அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அஞ்சாவ் எம்.எல்.ஏ.,வும், அருணாச்சல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான தசாங்லு புல் கூறுகையில், ''காணாமல் போன டிக்ரோ, பைன்சி மன்யு ஆகியோர், தங்கள் காவலில் இருப்பதை சீனா ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் உயிருடன் இருக்கின்றனர்,'' என்றார்.
அருணாச்சலில் வசிப்பவர்கள் எல்லையில் காணாமல் போவது அல்லது சீன ராணுவத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்படுவது இது முதன்முறை அல்ல.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மாயமாகும் நபர்கள் சில நாட்களில் வீடு திரும்பி விடுவர்.
ஆனால், இரு ஆண்டுகளுக்கு முன் மாயமாகின போன இருவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படாதது இதுவே முதன்முறை.