ஆதிஷியை தேர்வு செய்து அரவிந்த் கெஜ்ரிவால்...புதுக்கணக்கு!:டில்லி மக்களுக்கு 3வது பெண் முதல்வர்
ஆதிஷியை தேர்வு செய்து அரவிந்த் கெஜ்ரிவால்...புதுக்கணக்கு!:டில்லி மக்களுக்கு 3வது பெண் முதல்வர்
ADDED : செப் 17, 2024 09:47 PM

டில்லி முதல்வராக தன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆதிஷியை தேர்வு செய்து, அரவிந்த் கெஜ்ரிவால் புதுக்கணக்கை துவக்கியுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் பெண் ஒருவர் முதல்வராகிறார்.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு, கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கியது.
முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வருக்கான கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்றெல்லாம் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனால், முதல்வர் பதவியில் தொடர முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இது, மக்கள் மத்தியில், தன் இமேஜ், கட்சியின் செல்வாக்கு ஆகியவற்றை பாதிக்கும் என்று கருதிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.
தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ''17ம் தேதி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டில்லி சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலோடு, முன்கூட்டியே டில்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்யலாம். அவ்வாறு, முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்,'' என அதிரடியாக அறிவித்திருந்தார்.
இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறிவித்தபடி, நேற்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் துவங்கியதும் மூத்த தலைவர் திலீப் பாண்டே எழுந்து, ''புதிய முதல்வர் யார் என்பது குறித்தும், அவரது பெயரை முடிவு செய்தும் கெஜ்ரிவால் அறிவிப்பார்,'' என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் எழுந்து, ஆதிஷியின் பெயரை, முன்மொழிவதாக அறிவித்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று, கைதட்டி வழிமொழிந்து, ஒருமனதாக ஆதிஷியை தங்கள் கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்தனர்.
இதன் வாயிலாக, டில்லி அரசுக்கு, மூன்றாவது முறையாக பெண் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார். இதற்கு முன்பு, காங்கிரசை சேர்ந்த ஷீலா தீட்சி, பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் டில்லி முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர்.
அவர்கள் வரிசையில், தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியில், மீண்டும் ஒரு பெண் அமர்கிறார்.
- நமது நிருபர் -