டில்லியின் அடுத்த முதல்வர் ஆதிஷி மர்லினா சிங் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டில்லியின் அடுத்த முதல்வர் ஆதிஷி மர்லினா சிங் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
ADDED : செப் 18, 2024 01:17 AM

டில்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி விலகியதை அடுத்து, புதிய முதல்வராக, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஆதிஷி மர்லினா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும், முதல்வராக இருந்தவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இருப்பினும், முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வருக்கான கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டன.
இதனால், முதல்வர் பதவியில் தொடர முடியாத நெருக்கடியான சூழல் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது; இது, மக்கள் மத்தியில், தன் செல்வாக்கு மற்றும் கட்சியின் செல்வாக்கை பாதிக்கும் என்று கருதி, முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய கெஜ்ரிவால் முடிவெடுத்தார்.
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், டில்லி சட்டசபைக்கு மஹாராஷ்டிராவுடன் சேர்த்து, முன் கூட்டியே தேர்தல் நடத்த பரிந்துரைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
அடுத்த தேர்தலில் மக்கள் ஓட்டளித்தால் மட்டுமே, மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன் என்றும் கூறியிருந்தார். இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் மூத்த தலைவர் திலீப் பாண்டே, ''புதிய முதல்வர் யார் என்பது குறித்து கெஜ்ரிவால் அறிவிப்பார்,'' என்றார். இதன்பின், கெஜ்ரிவால் எழுந்து, மூத்த அமைச்சரான ஆதிஷி பெயரை முன்மொழிவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று கைதட்டி வழிமொழிந்து, ஒருமனதாக ஆதிஷியை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்தனர்.
இதை தொடர்ந்து, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை, அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
டில்லியில், மூன்றாவது முறையாக பெண் ஒருவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன், காங்கிரசை சேர்ந்த ஷீலா தீட்ஷித், பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் டில்லி முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். அவர்கள் வரிசையில், தற்போது, 11 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் பதவியில் மீண்டும் ஒரு பெண் அமர உள்ளார். தற்போது மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கும் நிலையில், இரண்டாவதாக ஆதிஷி உள்ளார்.
ஆம் ஆத்மி அதிருப்தியாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஸ்வாதி மாலிவால், ஆதிஷி குறித்து நேற்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதை கடுமையாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், 'நாங்கள் கொடுத்த எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அதற்கு பின் எங்களை ஸ்வாதி விமர்சிக்கலாம்' என்றனர்.
முதன் முறையாக அரசியலுக்கு வந்தவுடன், இத்தனை பெரிய பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளெல்லாம் ஆம் ஆத்மி கட்சியில் மட்டுமே நடக்கும். நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் கவலையாகவும் உள்ளது. என் மூத்த சகோதரர் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். டில்லி மக்களின் மனங்களில் முதல்வராக என்றைக்குமே அரவிந்த் கெஜ்ரிவால் தான் நீடித்திருப்பார். நான் அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக நீடிப்பேன்.
ஆதிஷி
டில்லி முதல்வர் தேர்வு
-- நமது டில்லி நிருபர் -