அரவிந்த் கெஜ்ரிவால் காவல் நான்கு நாட்களுக்கு நீட்டிப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் காவல் நான்கு நாட்களுக்கு நீட்டிப்பு
ADDED : மார் 29, 2024 12:17 AM

புதுடில்லி,: கலால் கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின், அமலாக்கத் துறை காவல் மேலும், நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்து, டில்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இடைக்கால நிவாரணமாக தன்னை உடனடியாக விடுதலை செய்ய கோரியிருந்தார்.
இது தொடர்பாக, ஏப்., 2ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில், 3ம் தேதிக்கு வருகிறது.
இந்நிலையில், அமலாக்கத் துறை காவல் முடிவடைந்ததையடுத்து, அவர் டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஏப்., 1ம் தேதிவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கி உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

