அரவிந்த், மணீஷ் சிசோடியா கவிதா காவல் நீட்டிப்பு உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமின் மனு
அரவிந்த், மணீஷ் சிசோடியா கவிதா காவல் நீட்டிப்பு உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமின் மனு
ADDED : ஜூலை 04, 2024 01:56 AM
புதுடில்லி:மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பி.ஆர்.எஸ்., தலைவர் கே.கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, மூவரும் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக்காவல் வரும் 12ம் தேதி வரையும், மற்ற இருவரின் நீதிமன்றக் காவலை வரும் 25ம் தேதி வரையும் நீட்டித்து, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.
இதே வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.
மதுபான கொள்கை விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி முறைப்படி சி.பி.ஐ., கைது செய்தது.
தன்னை சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
தற்போது ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை நாளை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.