ADDED : ஜூன் 12, 2024 12:05 AM
பெங்களூரு : '' காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள், கட்சிக்கு ஓட்டுகளை கொண்டு வரவில்லை என கூறி, எதிர்க்கட்சி தலைவர் அசோக், அவ்வப்போது தனது அறியாமையை வெளிப்படுத்தி, மாநில மக்களை மகிழ்வித்து வருகிறார்,'' என முதல்வர் சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.
'வாக்குறுதி திட்டங்களால் அரசு கஜானா காலியாகி விட்டது' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து, முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள், கட்சிக்கு ஓட்டுகளை கொண்டு வரவில்லை என கூறி, எதிர்க்கட்சி தலைவர் அசோக், அவ்வப்போது தனது அறியாமையை வெளிப்படுத்தி, மாநில மக்களை மகிழ்விப்பதாக கருதுகிறார்.
முறியடிப்பு
காங்கிரசின் வாக்குறுதியை அல்ல, மோடியின் வாக்குறுதிகளை, மாநில மக்கள் மட்டுமின்றி, நாட்டு மக்களும் முறியடித்து உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலை விட, லோக்சபா தேர்தலில் கர்நாடக மக்கள், காங்கிரசுக்கு கூடுதலாக 13 சதவீதம் ஓட்டுகள் வழங்கி உள்ளனர். இத்தேர்தலில் பா.ஜ., - காங்கிரசுக்கு இடையே 0.63 சதவீத ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதன் மூலம் யார் வெற்றி பெற்றது, யார் தோற்றது என்பதை இப்போது சொல்லுங்கள்.
கடந்த முறை 26 இடங்களில் பெற்றி பெற்ற நீங்கள், இம்முறை ம.ஜ.த.,வுடன் நீங்கள் கூட்டணி வைத்ததால், 17 இடங்களாக குறைந்து உள்ளது. ஆனால் நாங்கள் ஒரு இடத்தில் இருந்து ஒன்பது இடங்களை பிடித்துள்ளோம். முதலில் உங்கள் தோல்வியை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அரசியல் ஆதாயத்துக்காக வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால், சிக்கித் தவித்த மாநில மக்களுக்கு உதவும் நோக்கில் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
கஜானா காலியா?
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால், மாநிலத்தின் கஜானா காலியாகாது. மாநில நிதி நிலைமை பாதுகாப்பாக உள்ளது. கடன் வாங்கி, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலையில் அரசு இல்லை. உங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் அதிகமோ அல்லது குறைவோ இருந்தால், என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்; சரி செய்ய முயற்சிப்பேன்.
தலித்கள் மீதான உங்களின் அக்கறை போலியானது என்பதற்கு மத்திய அமைச்சரவையே சாட்சி. புதிய மத்திய அமைச்சரவையில் மாநிலத்தில் இருந்து ஒரு தலித் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.
பெங்களூரு ரூரலில் சுரேஷ் தோற்றது உண்மை தான். ஆனால், பல்லாரி, பீதர், சாம்ராஜ் நகர், சிக்கோடி, தாவணகெரே, கலபுரகி, ராய்ச்சூரில் பா.ஜ.,வினர் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர்.
ஹூப்பள்ளியில் அப்பாவி பெண் கொல்லப்பட்ட விஷயத்தை, உங்கள் கட்சியின் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி கொண்டதால் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இல்லாவிட்டால் உங்கள் கட்சி ஒற்றை இலக்கத்துடன் கீழே வீழ்ந்திருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.