ADDED : செப் 01, 2024 06:05 AM

பெங்களூருக்கு மிகவும் அருகில் உள்ள மாவட்டம் என்றால், அது ராம்நகர். பெங்களூரு நகரை ஒட்டி இருப்பதால், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. காவிரி ஆறு ஓடும் நகரமாகும்.
கர்நாடகாவிலேயே அதிக அளவில் பட்டு விளையும் பூமியாகும்.
அதிகபட்ச லாபம் கிடைப்பதால், அப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் விளைவிக்கின்றனர்.
மற்ற தோட்டப்பயிர்கள் விளைந்தாலும், பட்டு வளர்ப்புக்கு தான் விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
கூடுதல் செலவு
இங்கு விளையும் பட்டு, வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே ராம்நகரில் பட்டு சந்தை அமைக்கப்பட்டது.
மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர், துமகூரு உட்பட சுற்று வட்டார பகுதிகளில் விளையும் பட்டு, இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு, தினமும் 40,000 முதல், 50,000 கிலோ பட்டு விற்பனையாகிறது. கர்நாடக அரசால் நிர்வகிக்கும் மிகபெரிய பட்டு சந்தை, இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த சந்தை தான், ஆசியாவிலேயே மிக பெரிய பட்டு சந்தை என்று கூறப்படுகிறது.
கண்காணிப்பு
இதனால், ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களுக்கு வாழ்வளிக்கின்றன. விவசாய துறை சார்பில், 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. 'சிசிடிவி' கேமராக்கள் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
விவசாயிகள் கொண்டு வரும் பட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்பனையாகிறது. வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்யலாம்.
இப்படி வாங்கிச் செல்லும் வியாபாரிகள், தரம் பிரித்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, அதிக லாபம் பெறுகின்றனர். ஆண்டின் 365 நாட்களும் இந்த சந்தை திறந்திருக்கும் என்பதால், எப்போதும் பட்டு விற்பனை ஜோராக நடக்கும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களில், பட்டு கண்காட்சியும் நடக்கும்.
கல்வி சுற்றுலா
ஆராய்ச்சி மாணவர்கள், வெவ்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்களும் கல்வி சுற்றுலா வந்து, பார்வையிட்டு செல்வர். சந்தை அருகிலேயே பட்டு வளர்க்கும் விளை நிலங்களும் உள்ளதால், எப்படி விளைவிக்கப்படுகிறது என்பதையும், மாணவர்கள் நேரடியாக பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
அரசு பட்டு சந்தை மட்டுமின்றி, பணக்கார விவசாயிகள், சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்துள்ளனர். பட்டு உற்பத்தி செய்து, அதை சூரத், டில்லி போன்ற நகரங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதற்காக இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர்.
அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் இருந்தால், விலையை பார்த்து வாங்கி, அதிக லாபம் பெற முடியும். அதிக பட்டு விளைவதால், ராம்நகர் மாவட்டத்தை, பட்டு நகரமாகவே அழைக்கப்படுகிறது.
- நமது நிருபர் -