ஹோட்டல் உரிமையாளர்களின் விபரங்களை கேட்பதா?: உ.பி அரசின் உத்தரவுக்கு தடை விதிப்பு
ஹோட்டல் உரிமையாளர்களின் விபரங்களை கேட்பதா?: உ.பி அரசின் உத்தரவுக்கு தடை விதிப்பு
ADDED : ஜூலை 22, 2024 01:43 PM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் பெயர் பலகையில், உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என, அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது, 'கன்வார்' யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரை, உ.பி., உத்தரகண்டில் ஆண்டுதோறும் நடக்கிறது. 'கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் பெயர் பலகையில், அதன் உரிமையாளர் பெயர் இடம் பெற வேண்டும்' என, உ.பி.,யின் முசாபர்பூர் போலீசார் சமீபத்தில் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை போலீசார் திரும்பப் பெற்றனர்.
உத்தரவு
இதையடுத்து, மாநிலத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் பெயர் பலகைகளில், அவற்றின் உரிமையாளர் பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள், கட்டாயம் இடம்பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது.
மனுத்தாக்கல்
பெயர்களை எழுதி வைத்திருக்க வேண்டும் என சொல்வதன் மூலம் மக்களை அரசை வேறுபடுத்துகிறது. இதன் மூலமாக சிறுபான்மையினரை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது எனக் கூறி உ.பி அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கன்வார் யாத்திரை நடைபெறும் பாதையில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களை கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும் என உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.